குளிர்காலம் வரும்போது, பலரிடம் சில பழக்கவழக்கங்கள் மாறுகின்றன. குறிப்பாக, தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. குளிர்காலத்தில் சிலர் வெதுவெதுப்பான நீரை குடித்தாலும் சிலர் சாதாரண நீரையே குடிக்கின்றனர்.. ஆனால் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சருமப் பிரச்சனைகள் முதல் இத்த ஓட்டம் மற்றும் செரிமானம் வரை, உடலைப் பாதுகாப்பதில் வெதுவெதுப்பான நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முழுவதும் சூடான தண்ணீரைக் குடிப்பது கடினமாக இருந்தால், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதோ அல்லது சூடான நீரில் சிறிது குளிர்ந்த நீரைக் கலந்து குடிப்பதோ நல்ல பலனைத் தரும். இருப்பினும், இதனால் என்னென்ன நன்மைகள் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
குளிர்காலத்தில், ரத்த நாளங்கள் பொதுவாக ஓரளவிற்கு சுருங்குகின்றன. இதனால், இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதில்லை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது.
குளிர்காலத்தில், பலரும் உடல் வலி, குறிப்பாக முழங்கால், மூட்டுகள் மற்றும் முதுகில் வலி ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது தசைகளைத் தளர்த்தி, வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், குளிர்காலத்தில் நமது மெட்டபாலிசம் சற்று மெதுவாகச் செயல்படும். உடலின் மெட்டபாலிசத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இருமல் மற்றும் சளித் தொல்லைகள் குறையும். குளிர்காலத்தில், பலருக்கும் சளி காரணமாக மூக்கு மற்றும் தொண்டை அடைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் சளி கரைந்து, சுவாசப் பிரச்சனைகள் குறையும்.
மேலும், செரிமானத்திற்கு வெந்நீர் மிகவும் நல்லது. குளிர்காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகச் செயல்படும். இதனால் மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் செரிமானம் மேம்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தசை வலி, தலைவலி அல்லது உடலில் வேறு எங்கும் வலி இருக்கும்போது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நிவாரணம் பெறலாம். இது தசைகளைத் தளர்த்தி, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. குளிர்காலத்தில் சருமம் வறண்டு வெடிப்பது பொதுவானது. இதுபோன்ற நேரங்களில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறை மேம்பட்டு, சருமத்தின் உள்ளிருந்து ஈரப்பதம் தக்கவைக்கப்படுகிறது. இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.
தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், அவர்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். உடல் தளர்வடைந்து ஆழ்ந்த உறக்கத்தைப் பெறும். குளிர்காலத்தில் வெந்நீர் அருந்துவது ஒரு சிறிய பழக்கம்தான், ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தப் பழக்கத்தை நீங்கள் தினமும் பின்பற்றினால், பல உடல்நலப பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து கொள்ளலாம்.
Read More : வெயிட் லாஸ் முதல் செரிமான பிரச்சனை வரை.. தினமும் காலையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா..?



