பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் முக்கிய திட்டமாக தபால் அலுவலக சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) விளங்குகிறது. பெற்றோர்கள் தங்கள் மகள்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் திருமணம் போன்ற வாழ்க்கையின் முக்கிய கட்டங்களுக்கு முன்கூட்டியே நிதி ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இதற்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டமாக சுகன்யா சம்ரிதி யோஜனா செயல்படுகிறது.
இந்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் கணக்கைத் திறக்கலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை தொகையை டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்திற்கு அரசின் முழு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு மகளுக்கு 5 வயதில் கணக்கைத் தொடங்கி, தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் (மாதத்திற்கு ரூ.12,500) செலுத்தினால், மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆகும். இந்த தொகை கூட்டு வட்டியில் வளர்ந்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.69.27 லட்சமாக, அதாவது சுமார் ரூ.70 லட்சம் வரை கிடைக்கும். இதில் ரூ.46.77 லட்சம் வட்டி வருமானமாக பெறப்படும்.
இந்தத் திட்டம் சந்தை ஆபத்து இல்லாத நிலையான வருமானத்தையும், முழுமையான வரிவிலக்கையும் வழங்குகிறது. தற்போது, இந்தத் திட்டத்திற்கு 8.2% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வங்கி நிலையான வைப்புத் தொகைகள் உள்ளிட்ட பல சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாகும்.
மேலும், மகளுக்கு 21 வயது நிறைவடைந்ததும் கணக்கு முதிர்வு அடைகிறது. அதே நேரத்தில், 18 வயது கடந்த பிறகு கல்வித் தேவைகளுக்காக பகுதி பணத்தை திரும்பப் பெறவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், உயர்கல்வி காலத்தில் பெற்றோருக்கு ஏற்படும் நிதி அழுத்தம் பெரிதும் குறையும் எனக் கூறப்படுகிறது.
Read more: பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ஆண்களே, இதை மிஸ் பண்ணிடாதீங்க!



