மதுரை தவிட்டுச் சந்தையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் பக்தர்களின் அன்பையும், ஆன்மீக முக்கியத்துவத்தையும் பெற்ற இடமாக திகழ்கிறது. இக்கோயிலில் திரௌபதி அம்மனுடன் சந்தோஷி மாதா, சனீஸ்வரர், வலம்புரி விநாயகர், ஸ்ரீ சத்யநாராயண சுவாமி, திருநங்கைகள் வணங்கும் ஸ்ரீ நல்லமுடி அரவான், காவல் தெய்வமான வீரபத்திரர், பத்திரகாளி குரு உள்ளிட்ட பல தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
சிலப்பதிகாரம் கூறும் படி, கண்ணகியின் கோபத்தால் மதுரை நகரம் எரியாமல் தடுக்க மக்கள் பார்வதி தேவியை வேண்டினர். அப்போது பார்வதி தேவி, பஞ்சபாண்டவர்களின் துணைவியான திரௌபதியை அருள்புரிய அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி இந்தக் கோயில் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
வடஇந்தியாவில் அதிகம் வழிபடப்படும் சந்தோஷி மாதா, தென்னிந்தியாவில் அரிதாகவே வழிபடப்படுகிறார். ஆனால் இந்தக் கோயிலில் அவருக்கான சன்னதி இருப்பது தனித்துவமாகும். சந்தோஷி மாதாவை வழிபட்டால் குழந்தைப் பேரு, ஐஸ்வர்யம், திருமண தடை நீக்கம், தீய சக்திகளின் பாதிப்பு அகலும் என்று நம்பப்படுகிறது.
சிறப்பு வழிபாடுகள்:
- வியாழக்கிழமை – குருபகவான் சிறப்பு பூஜை
- வெள்ளிக்கிழமை – திரௌபதி அம்மன் வழிபாடு
- சனிக்கிழமை – சனீஸ்வரர் வழிபாடு
- ராகுகாலத்தில் – திரௌபதி அம்மனுக்கு அரளிப்பூ மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.
இங்கிருக்கும் சந்தோஷி மாதாவை வழிபட்டால் குழந்தை பேரு, சகல ஐஸ்வர்யம், ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது மேலும் திருமண தடை நீங்கவும், தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலவும் பொதுமக்கள் இந்த கோயிலில் வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் நடைபெறும் திருவிழா மற்றும் வைகாசி மாதத்தில் 16 நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகியவை இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். வாய்ப்பு இருந்தால் ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.