அம்மன் வழிபாட்டில் வழக்கமாக பயன்படுத்தப்படும் பாரம்பரிய நைவேத்யங்களுக்கு மத்தியில், மேற்கத்திய உணவுகளே பிரதானமாக படைக்கப்படும் ஒரு வித்தியாசமான கோயில் சத்தீஸ்கரில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு அம்மன் கோயிலில், பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா போன்ற மேற்கத்திய உணவுகளே நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், இது அங்கு நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டு மரபாகவே உள்ளது.
இந்த கோயில், தூமாவதி அம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது. தசமஹாவித்யா எனப்படும் 10 சக்தி வடிவங்களில் ஏழாவது சக்தியான தூமாவதி தேவிக்கு இந்த ஸ்தலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்மன், புகை வெளியேறும் நெருப்புக்குள் அமர்ந்தபடி வினோதமான, தனித்துவமான ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்தக் காட்சியினால்தான் அம்மனுக்கு “தூமாவதி” என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில், மிளகாய் பஜ்ஜி, கச்சோரி, பருப்பு வடை, பாஸ்தா, பீசா, பர்கர் போன்ற உப்பான மற்றும் கார உணவுகள் மட்டுமே நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. உள்ளூர் பக்தர்களின் நம்பிக்கைப்படி, தூமாவதி அம்மனுக்கு இனிப்பு உணவுகளை விட கார உணவுகளே அதிகம் விருப்பம் என கூறப்படுகிறது.
நவராத்திரி போன்ற முக்கிய நாட்களில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அலங்காரம், வஸ்திரம், உணவுகளுடன் வழிபாடுகள் நடைபெறுகின்றன. சில பக்தர்கள், தங்கள் கனவில் கூட அம்மன் வந்து “பீசா, பர்கர்” போன்ற உணவுகளை நைவேத்யமாக படைக்க வேண்டும் என்று சொன்னதாக பகிர்ந்து கொள்கிறார்கள். தூமாவதி அம்மனின் தனித்துவமான வடிவமும், இந்த வித்தியாசமான உணவு நைவேத்ய மரபும், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்களை இந்த கோயிலுக்கு ஈர்த்து வருகிறது.
Read more: Breaking : மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. இனிமே கனவில் தான் நகை வாங்கணும் போல..!



