சென்னை அருகே கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையில் அமைந்துள்ள புதுப்பாக்கம் கஜகிரி வீர ஆஞ்சநேயர் கோவில், ஆன்மிக ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தெய்வீக சக்தியுடன் நெருக்கமாக இணைகிறார்கள். மலை உச்சியில் அமைந்துள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க 108 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
அங்கு அனுமன், கையில் சஞ்ஜீவி மலையையும், அபய முத்திரையையும் காட்டியபடி, பறக்கத் தயாரான நிலையில் அருள்புரிகிறார். வாலில் மணி கட்டிய கோலத்திலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வடிவத்திலும் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணர் சன்னதி உள்ளது. அங்கும், ராமரின் பாதத்தில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அனுமன் காட்சி தருகிறார்.
வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை, சாற்றி அலங்காரம் செய்து அனுமனை வழிபடுகிறார்கள். இவரை வழிபட்டால் தீய சக்திகள் விலகும், நோய்கள் நீங்கும்,
மனஅழுத்தம், பயம், கவலை அகலும், திருமணத் தடைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
பெரும்பாலானவருக்கும் சொந்தமாக வீடு கட்டி, அதில் குடியேற வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் சொந்த வீடு கட்டும் முயற்சி தடைபட்டு கொண்டே இருக்கும். கடினமாக உழைத்தாலும் கூட சொந்த வீடு கட்டுவது வெறும் கனவாகவே மட்டுமே இருக்கும். இவர்கள் அமாவாசை நாளில், ராமநாமம் எழுதப்பட்ட புதிய செங்கலுடன் கிரிவலம் செல்வது, வீடு கட்டும் யோகம் பெற வழிவகுக்கும்.
பவுர்ணமி நாளில், ஆஞ்சநேயர் தாமாகவே கிரிவலம் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அந்த நேரத்தில் பக்தர்களும் கிரிவலம் வந்தால் வாழ்க்கை பிரச்சனைகள் நீங்கி, நல்ல நிகழ்வுகள் நடைபெறும். புதுப்பாக்கம் கஜகிரி வீர ஆஞ்சநேயர் கோவில், பக்தர்களின் ஆன்மிகத் துயரம் நீக்கும், நம்பிக்கைக்கு உரிய சக்தி மிக்க தலம். அனுமனை அன்புடன் வழிபடுவோரின் மனதில் துணிவு, நம்பிக்கை, செல்வம், சுபீட்சம் மலர்ந்து வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழும் என பொதுவான நம்பிக்கை உள்ளது.
Read more: பண விஷயங்களில் இந்த தவறை செய்யாதீங்க.. லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..!



