நம்மில் பலர் சாலையில் செல்லும் போது லாரிகளின் முன்புறத்தில், வலது மற்றும் இடது பக்கங்களில் நீண்டு நிற்கும் ஆண்டெனா போன்ற கம்பிகளை பார்த்திருப்போம். அவை லாரி நகரும் போது அதிர்வடிக்கும். பெரும்பாலானோர் இதை வெறும் அலங்காரப் பொருளாகவே நினைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில், அந்தக் கம்பிகள் வாகன பாதுகாப்பிற்காக மிகவும் முக்கியமான பங்காற்றுகின்றன.
சமூக ஊடகங்களில், குறிப்பாக Quora போன்ற தளங்களில், “இந்தக் கம்பிகள் ஏன் பொருத்தப்படுகின்றன?” என்ற கேள்விக்கு பலர் பலவிதமான பதில்களை அளித்துள்ளனர். சிலர் இதை ‘ஸ்டைல்’ காக, சிலர் ‘ஆண்டெனா’ போல, சிலர் ‘டிரைவருக்கு காட்சி அலங்காரம்’ காக என்று கருதினர். ஆனால், வாகன வடிவமைப்பு துறையில் பணிபுரியும் நிபுணர்கள் சொல்வது இதற்கு மாறானது.
Tata Elxsi நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணிபுரியும் யசாஷ் ஷெட்டி, இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அவர் கூறியதாவது: “லாரிகளின் இருபுறங்களிலும் பொருத்தப்படும் இந்தக் கம்பிகள் ‘மார்க்கர்’ என அழைக்கப்படுகின்றன. லாரி ஓட்டுநர் குறுகலான சாலைகளில் செல்லும்போது அல்லது வாகனத்தை திருப்பும்போது, வாகனத்தின் விளிம்பு எங்கே உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இது உதவுகிறது.
மார்க்கர் கம்பி சுவர்களோ, தடைகளோ, மற்ற வாகனங்களோ தொடர்பு கொண்டால், அது ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிக்கும். இதனால், வாகனம் நேரடியாக இடிபடுவதிலிருந்து காப்பாற்றப்படுகிறது.” என்றார்.
மார்க்கர் கம்பிகள் எங்கு கிடைக்கும்? இந்த மார்க்கர் கம்பிகள், வாகன உதிரிபாகக் கடைகளில் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களிலும் எளிதாக கிடைக்கின்றன. ஆன்லைனில் இவை “Car Bumper Corner Antenna” என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை மிகக் குறைவு .
கார்களுக்கும் பயன்படுத்தலாமா..? பெரும்பாலும் லாரிகளிலும், சில பேருந்துகளிலும் இந்தக் கம்பிகள் காணப்பட்டாலும், தனியார் கார் உரிமையாளர்களும் குறுகிய இடங்களில் வாகனம் இயக்கும் போது பயன்படுமாறு இவற்றை பொருத்திக்கொள்கிறார்கள். குறிப்பாக, புதிய ஓட்டுநர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
சாலையில் நாம் அடிக்கடி பார்க்கும் சில பொருட்களின் உண்மையான பயன்பாடு நம்மால் கவனிக்கப்படாமல் போகிறது. லாரிகளின் முன்புறக் கம்பிகள் அதற்குச் சிறந்த உதாரணம். அலங்காரம் போல தோன்றும் இந்த ‘மார்க்கர்’ கம்பிகள், ஓட்டுநருக்கும் வாகனத்திற்கும் ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகின்றன. ரூ.50-க்கும் குறைவான செலவில் கிடைக்கும் இந்த எளிய கருவி, வாகன சேதங்களைத் தடுக்க பெரிய பங்காற்றுகிறது.
Read more: Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?