தீபாவளி என்றால் இன்றைய தலைமுறைக்கு நினைவில் வருவது பட்டாசு, வண்ண விளக்குகள், மின்னும் தெருக்கள், சமூக ஊடக வாழ்த்து. ஆனால், இந்தப் பண்டிகையின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை மறந்து வருகிறோம். ராமாயணத்தின் கதையில் கூறப்படுவது போல், 14 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் அயோத்திக்குத் திரும்பிய போது, அயோத்தி மக்கள் அவரை பட்டாசுகளால் அல்ல, மாறாக வரிசையாக எண்ணெய் விளக்குகளை ஏற்றி வரவேற்றனர்.
அந்த ஒளி, அவர்களின் இதயங்களில் ராமனின் வருகையால் ஏற்பட்ட ஆனந்தத்தின் வெளிப்பாடு. இருளை ஒளியால் வெல்லுதல் என்பதே தீபாவளியின் உண்மையான தத்துவம். ஆனால், நூற்றாண்டுகள் கடந்தபின், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியோடு, பட்டாசுகள் பண்டிகையின் ஒரு புதிய அடையாளமாக மாறின. கி.பி. 800-இல் பண்டைய சீனாவில் மூங்கில் தண்டுகளில் வெடிமருந்து நிரப்பி தயாரிக்கப்பட்டவைதான் முதல் பட்டாசுகள்.
பின்னர், முகலாயர் ஆட்சிக் காலத்தில் அவை இந்தியாவுக்குத் தாண்டி வந்தன. அப்போது அரசவைகளின் விருந்துகளில், பட்டாசுகள் ‘பெருமையின் அடையாளம்’ ஆகக் கருதப்பட்டன. பிறகு 19ஆம் நூற்றாண்டில், சிவகாசி போன்ற நகரங்கள் இந்தியாவின் பட்டாசு உற்பத்தி மையங்களாக மாறின. இன்று அது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகி உள்ளது.
தற்போது சிலர் சூழல் மாசுபடும் என்ற பெயரில் பட்டாசு வெடிக்கக்கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலரோ, ஆண்டு முழுவதும் வாகன இயக்கம், தொழிற்சாலைகள் மூலம் வெளிவரும் புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தாமல், ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு மட்டுமே சூழலை மாசுபடுத்துவதாகக் கூறுவது தவறு என கருத்து சொல்கின்றனர்.
தீபாவளி என்பது வெறும் பட்டாசு வெடிக்கும் பண்டிகை அல்ல; அது மனதில் உள்ள இருளையும் அகற்றும் நாள். “விளக்குகள் ஏற்றுவது” என்பது வெளிப்புற ஒளியல்ல, நம்முள் உள்ள மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் ஒளி. ஆகவே, பட்டாசுகளை முற்றிலும் மறுப்பதும் சரியல்ல; ஆனால், அளவோடு, பொறுப்புடன் கொண்டாடுவது தான் காலத்தின் தேவை.
Read more: தீபாவளிக்கு முகம் பளபளக்க வேண்டுமா?. அரிசியை பயன்படுத்தி இந்த ஃபேஸ் பேக்கை டிரை பண்ணுங்க!.



