நீங்கள் Netflix, மொபைல் பில்கள், அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியங்களுக்கு ஆட்டோபே (Autopay) வசதி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இதை கவனிக்க வேண்டும்.. RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதிய விதிகளின்படி இந்த வசதிக்கு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது உங்கள் வங்கி எப்போது பணம் தானாகப் பிடிக்கலாம், எப்போது OTP அனுப்ப வேண்டும், எப்போது பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்பதற்கு புதிய நெறிமுறைகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
ஆட்டோபே அமைப்பது எப்படி?
நீங்கள் ஆட்டோபே வசதியை இரண்டு வழிகளில் தொடங்கலாம்:
உங்கள் வங்கியின் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம்,
அல்லது நேரடியாக Netflix, மின்சாரம், மொபைல் சேவை போன்ற விற்பனையாளர் தளத்தில்.
ஒருமுறை பதிவு செய்த பிறகு, வங்கி அதை செயல்படுத்த அதிகபட்சம் 7 நாட்கள் எடுக்கும்.
அந்த நேரத்திற்குள் பில் தேதியிருப்பின், அதை கையால் (manual) கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
செயல்பாட்டில் வந்ததும், உங்கள் பில் தேதியன்று வங்கி தானாகவே தொகையை பிடிக்கும்.
ஆனால், டெபிட் கார்டு மூலம் பணம் பிடிக்கப்படும்போது உங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லையெனில் வங்கி சிறிய அபராதம் வசூலிக்கலாம்.
நிரந்தர (Fixed) மற்றும் மாறும் (Variable) கட்டணங்கள்
ஆட்டோபே இரு வகைப்படும்:
Fixed mandate – ஒவ்வொரு மாதமும் தொகை ஒரே மாதிரியாக இருக்கும் (உதாரணம்: Netflix ரூ.399 திட்டம்).
Variable mandate – ஒவ்வொரு முறை தொகை மாறும் (உதாரணம்: கரண்ட் பில்).
இரண்டிற்கும் RBI விதிகள் பொருந்தும், ஆனால் தொகை எவ்வளவு என்பதைப் பொறுத்து அனுமதி முறை மாறும்.
ரூ.15,000 விதி – இதை மறக்க வேண்டாம்
உங்கள் மாதாந்திர கட்டணம் ₹15,000-க்குள் இருந்தால், வங்கி தானாகவே அதை செயல்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் தொகை இருந்தால், OTP மூலம் நீங்கள் உறுதிப்படுத்திய பின்னரே பணம் பிடிக்கப்படும். அந்த OTP எச்சரிக்கையைப் புறக்கணித்தால், கட்டணம் செல்லாது.
சில சிறப்பு பிரிவுகளுக்கு சற்று தளர்வு உள்ளது.. உதாரணமாக இன்ஷூரன்ஸ் பிரீமியம், SIP (மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்), கிரெடிட் கார்டு பில்கள் — இவை ரூ.1 லட்சம் வரை OTP இல்லாமல் தானாகக் கட்டலாம். அதற்கு மேல் இருந்தால், கையேடு உறுதிப்படுத்தல் (manual approval) தேவைப்படும்.
24 மணி நேர எச்சரிக்கை அவசியம்
ஒவ்வொரு கட்டணத்துக்கும் முன்பாக, வங்கி குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் ஒரு SMS அல்லது Email எச்சரிக்கை அனுப்ப வேண்டும். அதில் விற்பனையாளர் பெயர், தொகை, பில் தேதி போன்ற விவரங்களுடன், அந்த கட்டணத்தை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ ஒரு விருப்பமும் இருக்கும். இதனால் தேவையில்லாத சந்தாக்கள் (subscriptions) தானாகப் பிடிக்காமல் தடுக்கலாம்.
RBI அனுமதித்த விற்பனையாளர்களுக்கு மட்டுமே
இந்த ஆட்டோபே வசதி RBI விதிகளுக்கு உட்பட்ட விற்பனையாளர்களுக்கே செயல்படும்.
நீங்கள் பதிவு செய்தவுடன், வங்கி SMS அல்லது Email உறுதிப்படுத்தல் அனுப்பும். அந்த விற்பனையாளர் RBI விதிகளை பின்பற்றவில்லை என்றால், ஆட்டோபே இயங்காது.. அந்தச் சேவைக்கு பணம் கையால் (manual) செலுத்த வேண்டி வரும்.
கார்டு இழந்தால் ஆட்டோபே தானாக நிற்கும்
உங்கள் கார்டு இழந்தால், திருடப்பட்டால், காலாவதியானால் அல்லது தடைசெய்யப்பட்டால், அதனுடன் இணைந்துள்ள அனைத்து ஆட்டோபே பரிவர்த்தனைகளும் தானாக நிறுத்தப்படும். புதிய கார்டு பெற்ற பிறகு, பழைய ஆணையை (mandate) நீக்கி, புதிதாக பதிவு செய்ய வேண்டும். இத்தகைய நிலைகளில் வங்கிகள் தவறான கட்டணங்களுக்கு பொறுப்பல்ல.. ஆகவே கார்டு விவரங்களை உடனே புதுப்பிப்பது முக்கியம்.
இந்த புதிய விதிகள் உங்கள் ஆட்டோபே அனுபவத்தை பாதுகாப்பானதும் வெளிப்படையானதுமாக மாற்றும். ஆனால், OTP எச்சரிக்கைகளை கவனிக்காமல் விட்டால், “payment failed” செய்தி உங்களை எச்சரிக்கும்!
Read More : குட்நியூஸ்..! இனி வெள்ளிக்கும் கடன் பெறலாம், ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு.. முழு விவரம் இதோ..!



