வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் நம்பர் வாங்குவதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
புதிய முறையின்படி, ஃபேன்சி நம்பர் வாங்குவதற்கு இருந்த நிலையான கட்டணம் மாற்றப்படுகிறது. இனி ஏலம் முறையில் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நம்பர் கிடைக்கும். இதற்கான நுழைவு கட்டணம் ரூ 1,000 இருந்து ரூ 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் 48 மணி நேரத்திற்குள் பணத்தை கட்ட வேண்டும். 30 நாட்களுக்குள் வாகனத்தை காட்டவில்லை என்றால், அந்த நம்பர் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொது ஏலத்திற்கு வந்துவிடும். இந்த புதிய விதி ஆகஸ்ட் 18 முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாகன உரிமையாளர்கள் பரிவாஹன் (Parivahan) இணையதளத்தில் username மற்றும் password பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதில் தங்கள் RTO-வை தேர்ந்தெடுத்து, மூன்று விதமான நம்பர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். சூப்பர் ஃபேன்சி (0001, 1111), செமி-ஃபேன்சி (1000, 5000), மற்றும் ரன்னிங் ஃபேன்சி (அடுத்த 1,000 நம்பர்களுக்குள்) போன்ற விருப்பங்கள் உள்ளன.
வங்கிகள் ஆன்லைனில் சொத்துக்களை ஏலம் விடுவது போல, e-bidding குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நம்பருக்கும் அரசு ஒரு அடிப்படை விலையை நிர்ணயிக்கும். இது ரூ 2,000 முதல் ரூ2 லட்சம் வரை இருக்கும். ஏலத்தில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள், எவ்வளவு நேரம் ஏலம் நடைபெறும் போன்ற விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். ஏலம் ₹500 மடங்குகளில் அதிகரிக்கும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த முறை ஏற்கனவே புதுச்சேரியில் அமலில் உள்ளது. அங்கு ஒரு தனியார் நிறுவனம் எந்தவித தலையீடும் இல்லாமல் இதை நடத்துகிறது. கேரளாவில் இந்த முறையில் அதிக விலைக்கு நம்பர்கள் ஏலம் போயுள்ளன. இந்த ஆண்டு ஒரு Lamborghini க்கான நம்பர் ₹45 லட்சத்திற்கு ஏலம் போனது. “இந்த மாற்றத்தின் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நம்பர் ஒதுக்கீட்டில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும்” என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த புதிய வரைவு அறிவிப்பு ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிடப்பட்டது. இது குறித்து ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகள் இருந்தால், 30 நாட்களுக்குள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Readmore: அனல் பறக்கும் புரோ கபடி லீக்!. தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி!