இந்துக்களின் வழிபாட்டில், பிரதோஷ தினங்கள் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தவை என்றாலும், திங்கட்கிழமைகளில் வரும் சோமவார பிரதோஷம் மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. இது மனிதர்களின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ராஜயோக பிரதோஷம் என்று புராணங்கள் போற்றுகின்றன.
திங்கட்கிழமை சந்திரனுக்கு உரிய நாள் என்பதால், இதைச் சந்திர பிரதோஷம் அல்லது சோம பிரதோஷம் என்றும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை அன்றுதான், சிவபெருமான் சந்திரனின் சாபத்தை நிவர்த்தி செய்தார்; இதன் காரணமாகவே இது ‘சோமவாரம்’ என்று அழைக்கப்படுகிறது.
பிரதோஷத்தின் சிறப்பு :
இந்த சோமவாரப் பிரதோஷ விரதமானது, ஒரே நாளில் ஆயிரம் பிரதோஷங்களுக்கு சமமான பலனைத் தரக்கூடியது என்று நம்பப்படுகிறது. இது குறித்து பக்தர் அருணாசலம் கூறுகையில், “சோமவாரமும் பிரதோஷமும் இணைந்து வருவது சிவபெருமானை வழிபடுவதற்கு மிகச் சிறந்த நாளாகும். இந்த நாளில் முழு மனதுடன் விரதம் இருந்து சிவனை வழிபட்டால், நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் இந்தப் புனித நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், அவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் நீடித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
ராஜயோகம் தரும் அரிய அமைப்பு :
குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரப் பிரதோஷமானது, செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் இணையும் ஒரு அரிய அமைப்பைக் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்நாளில் வழிபடும் பக்தர்களுக்கு ராஜயோகம் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. அதாவது, வீடு கட்டும் பாக்கியம், தொழிலில் அசுர வளர்ச்சி, செல்வம் செழிப்பு, உடல் ஆரோக்கியம் மேம்படுதல் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குதல் போன்ற நற்பலன்கள் கிட்டும்.
பிரதோஷ நாட்களில் அனைத்துத் தேவர்களும், முனிவர்களும் சிவன் கோயில்களில் ஒன்றிணைந்து சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். எனவே, பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விரதமும் வழிபாட்டு முறைகளும் :
பிரதோஷ தினங்களில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குப் பால், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களை அபிஷேகம் செய்வதற்காக வாங்கி அளிப்பது மிகுந்த பலனளிக்கும்.
அபிஷேகம் மற்றும் தீபம்: அன்றைய தினம் சிவபெருமானுக்கு வில்வம் இலைகள் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.
நந்தி வழிபாடு: பிரதோஷ வழிபாட்டில் நந்திக்கு முக்கியப் பங்குண்டு. நந்தியின் காதில் நமது கோரிக்கைகளை 3 முறை கூறினால், அந்தக் கோரிக்கைகள் அப்படியே நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
குறிப்பாக, சோமவார பிரதோஷத்துக்கு சனி பகவானின் தோஷத்தை நீக்கும் வல்லமை உண்டு என்று அருணாசலம் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே, பக்தர்கள் இந்த அரிய சோமவார பிரதோஷத்தை பயன்படுத்திக் கொண்டு, சிவனின் அருளைப் பெற்று, வாழ்வில் ராஜயோகத்துடன் வாழலாம்.
Read More : ஐயப்பன் விரதம் கடைபிடிக்கும் முறைகள்..!! மாலை அறுந்து போனால் என்ன செய்வது? எதையெல்லாம் செய்யக்கூடாது..?



