விரத முறைகளால் மாரடைப்பு ஏற்படுகிறதா?… இனி பயமில்லை!… ஆய்வுகளுக்கு விளக்கமளித்த மருத்துவர்!

Heart attack: நாம் அடிக்கடி கடைபிடிக்கப்படும் விரத முறைகள் இதய நோயை ஏற்படுத்துமா என்பது குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுவரை உண்ணாநிலை நோன்பு விரதம் குறைவான நேரத்தில் உணவு சாப்பிட்டு நெடு நேரம் உண்ணாமல் இருப்பதால் உடல் நலனில் பல முன்னேற்றங்கள் அடைய முடியும் என்பதே நம்பிக்கையாகவும் அந்த நம்பிக்கையை உறுதிபடுத்தும் வண்ணம் அறிவியல் ஆய்வு முடிவுகளும் உள்ளன.

நோன்பு விரதமுறைகளால் உடல் எடை குறைவதும் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு உள்ளுறுப்புகளில் சேர்ந்துள்ள கொழுப்பு போன்றவற்றை கரைப்பதில் பங்காற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் தேக நலன் குறிப்பாக இதய நலன் மேம்படுவதைக் காண முடிகின்றது. உண்ணாவிரதம் ( TIME RESTRICTED EATING – குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு உண்ணும் முறை) கடைபிடிப்பவர்களுக்கு இதய நோய் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு அமெரிக்க இதய நோய் சிகிச்சையாளர்கள் சங்கக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதில் இருந்து மருத்துவ அறிவியல் உலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பொதுமக்களிடையேவும் பரபரப்பு மூங்கில் காட்டில் தீயெனப் பற்றிக் கொண்டது. “ஹையோ நான் டெய்லி காலை சாப்பாடு லேட்டா பத்து மணி போல சாப்ட்டு நைட் சாப்பாட மாலை ஆறு மணிக்குள்ள சாப்ட்டு 16 மணிநேரம் விரதம் ; 8 மணிநேரத்திற்குள்ள சாப்பாடு சாப்டுட்டு இருக்கேனே.. இதய நோய் வந்துடுமா?” என்று அச்சம் கொண்டு வருவதைக் காண முடிகின்றது.

அந்த ஆய்வு முடிவு குறித்த விளக்க உரையே இந்தப் பதிவு, முதலில் திருவாளர் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். மருத்துவ அறிவியல் உலகில் ஆய்வுகள் தொடர்ந்து வெளியிடுப்படுவது வழக்கம். காலத்தின் கட்டாயமும் கூட. ஆயினும் இத்தகைய ஆய்வுகள் செய்யப்படும் விதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்கள் ஆய்வு செய்தோர் ஆகியவற்றைப் பொருத்து அந்த ஆய்வின் தரம் முடிவு செய்யப்படுகிறது.

மேலும் ஒரு மருத்துவ ஆய்வு – மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட உடன் அதை சக மருத்துவ ஆய்வாளர்கள் அதைப் படித்து அதன் தரம் குறித்து ஆய்ந்து கருத்து தெரிவித்த பின் அதன் தரம் குறித்து இன்னும் சிறப்பாக அறிய முடியும். எந்திரன் படத்தில் சிட்டியை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்காக அதற்கு திறனாய்வு நடக்குமே அது போல இந்த அறிவியல் ஆய்வு தரும் முடிவை மருத்துவ அறிவியல் ஏட்டில் ஏற்றுவதற்கு ஏற்புடையதா என்பதை PEER REVIEWING (சக மருத்துவ ஆய்வாளர்களின் திறனாய்வு) முடிவு செய்யும். வெளியிடப்பட்ட குறிப்பிட்ட ஆய்வு என்பது சக அறிவியலாளர்களால் திறனாய்வு செய்யப்பட்டதன்று மாறாக மருத்துவக் குழுவினரால் செய்யப்பட்ட ஆய்வின் முடிவின் சாராம்சம் ( ABSTRACT) மட்டுமே.

முழு ஆய்வு கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்ட முறையில் பிழை உள்ளது. அதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை. முதல் பிழை- 2003 முதல் 2018 வரை ஆன காலத்தால் 20 வயது நிரம்பியவர்கள் ஆய்வுக்கு சேர்த்துக் கொண்டுள்ளனர். அதில் அவர்களிடம் ஒரு பாரம் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். ஆய்வுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ஒரு வருடத்துக்குள் இரண்டு முறை இது போன்று பாரம் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த பாரத்தில் கேட்கப்பட்டது என்ன? கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் சாப்பிட்டது என்ன? காலை உணவை எப்போது சாப்பிட்டீர்கள்? இரவு உணவை எப்போது முடித்தீர்கள்? என்பதாகும்.

இவ்வாறு வெறுமனே இரண்டு நாட்கள் சாப்பிட்டதை வைத்து அவர்கள் பல வருடங்கள் அவ்வாறு தான் சாப்பிட்டிருப்பார்கள் என்று இவர்களாகவே கணித்து ஆய்வு முடிவை வெளியிட்டுருக்கிறார்கள். அதாவது உதாரணமாக நான் இப்போது ரமலான் நோன்பில் இருக்கிறேன். என்னிடம் இந்த மாதத்தில் பாரம் பூர்த்தி செய்ய சொன்னால் நான் அதிகாலை 4.30 மணிக்கு காலை உணவு என்றும் இரவு உணவை 8 மணிக்கு முடிக்கிறேன் என்று கூற விளைவேன்.

ஆனால் இது போன்று நான் வருடத்தின் இதர 11 மாதங்கள் உண்பதில்லை. கிறிஸ்தவ சகோதரர்கள் தற்போது லெண்ட் விரதம் அனுசரித்து வருகிறார்கள் . மாமிச உணவுகள் உண்பதில்லை. அதன் படி அவர்களில் விரதமுறை இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு அமையும். இந்த நாட்களில் ஆய்வு செய்து விட்டு குறிப்பிட்ட நபர் மரக்கறி உணவைத் தான் வருடத்தின் இதர நாட்களும் சாப்பிட்டார் என்று கணிப்பது தகுமோ? இந்து மத சகோதரர்கள் வாரத்தின் சில நாட்கள் மரக்கறி மட்டும் உணவு முறையில் இருப்பார்கள் .

அந்த நாளில் ஆய்வு முடிவை வாங்கி விட்டு, அதை வைத்து அவர்கள் மரக்கறி மட்டுமே உணர்கிறார்கள் என்று கூறுவது தவறாகும் தான்? இப்படித்தான் இந்த ஆய்வில் பங்குபெற்றோரும் அந்த பாரத்தை பூர்த்தி செய்த இரு நாட்களில் கடைபிடித்த பழக்கத்தை பல வருடங்கள் தொடர்ந்து கர்ம சிரத்தையாக கடைபிடித்திருப்பார்கள் என்று கூற இயலாது. இரண்டாவது பிழை- இந்த ஆய்வில் , ஆய்வுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மக்கள் எப்போது உணவை சாப்பிட்டார்கள் என்பதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவர்கள் சாப்பிட்ட உணவு எது? அவர்களுக்கு மது புகை போன்ற பழக்கங்களும் இருந்தன? என்பது குறித்து கணக்கில் எடுக்காமல் விடப்பட்டுள்ளது.

உதாரணம் இந்த ஆய்வைப் பொருத்தவரை இரவு சாப்பாடு விரைவாக சாப்பிட்டு விட்டு உறங்கி எழுந்து விரதத்தில் இருப்பவரும் இரவு லேட் நைட் நன்றாக சரக்கு சைடு டிஷ் என்று ஏற்றி விட்டு முழு போதையில் உறங்கி அடுத்த நாள் லேட்டாக எழுந்து எண்ணெயில் பொரித்த ஃபாஸ்ட் ஃபுட் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கும் நபரும் சரிசமமாக வைத்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் கூறப்பட்ட நபரும் இரண்டாவது கூறப்பட்ட நபரும் குறைவான நேரத்தில் சாப்பிட்டு விரதம் இருக்கும் முறையில் தான் இருக்கின்றனர்.

ஆனால் இருவரும் சாப்பிட்ட உணவின் தரத்தில் வேறுபடுகிறார்கள் தானே? இந்த முக்கியமான விசயத்தை ஆய்வில் கருத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மூன்றாவது விசயம்- இந்த ஆய்வில் எட்டு மணி நேரங்களுக்குள் உணவை சாப்பிட்டதாகக் கூறியவர்கள், பதினாறு மணிநேரங்களுக்கு உணவை சாப்பிட்டவர்களை விட உடல் பருமனாக இருந்தது தெரிகிறது. ஆனால் நிகழ் மெய் உலகில் விரத முறைகளை முறையாகக் கையாள்பவர்கள் அதை வாழ்க்கை முறையாக அனுசரிப்பவர்கள் உடல் எடையை சரியாக பராமரிப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.

இதில் இருந்தே இந்த ஆய்வில் உண்ணப்பட்ட நேரம் மட்டுமே கணக்கில் கொண்டு உண்ணப்பட்ட உணவின் தரம் கணக்கில் கொள்ளப்படாதது புலனாகிறது.; இறுதியாக இது போன்ற கூர்நோக்கு ஆய்வுகளில் ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்த (ASSOCIATION)முடியுமேயன்றி இதனால் தான் இது நேர்ந்தது (CAUSATION)என உறுதியாக அறுதியிட்டுக் கூறல் இயலாது. பலகீனமான ஆய்வு முறையை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த கூர்நோக்கு ஆய்வு முடிவை அறிவியல் பார்வையில் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

விரத முறைகளைக் கடைபிடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது குறித்து பல தரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எனவே தாங்கள் கடைபிடித்து வரும் விரத முறை/ நோன்பு போன்றவற்றைத் தொய்வின்றித் தொடரவும் அத்துடன் ஆரோக்கியமான உணவுகளையும் உடல் பயிற்சியையும் உள நலனையும் உறக்கத்தையும் பேணல் வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Readmore: Andhra முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Kokila

Next Post

Woww...! கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம்... தமிழக அரசு புதிய அறிவிப்பு...!

Tue Apr 2 , 2024
பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் கர்ப்பம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில், பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமான மகளிர் […]

You May Like