போலி சான்றிதழ்களை பெற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
பீகார் மாநிலம் மசாவுரி மண்டல அலுவலகம், ஒரு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. சான்றிதழில் அந்த நாயின் பெயர் “டாக் பாபு”, தந்தையின் பெயர் “குட்டா பாபு”, தாயின் பெயர் “குட்டியா பாபு” என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முகவரி கவுலிசக் மொஹல்லா, வார்டு எண் 15, மசாவுரி நகராட்சி மன்றம். சான்றிதழ் எண்: BRCCO/2025/15933581 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், மசாவுரி வருவாய் அலுவலர் முராரி சவுகான் என்பவரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஸ்வராஜ் இந்தியா கட்சியின் முக்கியத் தலைவர் யோகேந்திர யாதவ் தனது X கணக்கில் பகிர்ந்ததோடு, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பட்னா மாவட்ட நிர்வாகம், விண்ணப்பதாரர், கணினி ஆபரேட்டர் மற்றும் சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது உள்ளூர் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மசாவுரியின் துணைப்பிரிவு அதிகாரி இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
Read more: ஆபரேஷன் மகாதேவ்: ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!