விசிக தேர்தல் அரசியலில் வந்ததில் இருந்து ஆட்சி அகாரத்தில் பங்கு என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனே பல்வேறு மேடைகளில் கோரிக்கை விடுத்து வந்தார். “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் விசிகவின் நிலைபாடு.. ஏன் நாங்கள் முதலமைச்சருக்கு ஆசைப்படக் கூடாதா? நாங்களும் ஆட்சியில் பங்கு கேட்போம்” என்று திருமாவளவன் பேசிய வீடியோ வைரலானது.
இந்த நிலையில், 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என விசிக திடீரென தெரிவித்துள்ளது. விசிக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் பேசுகையில், “2026ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். திமுக தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். இரட்டை இலக்க இடங்களை திமுகவிடம் விசிக கேட்கும்” என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், “நாங்கள் இந்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைக்கவில்லை. 2026 தேர்தலில் நாங்கள் அதை வலியுறுத்த மாட்டோம். அதேசமயம் அந்த கருத்தை நாங்கள் கைவிடவில்லை. பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை இந்த தேர்தலில் நாங்கள் ஒரு நிபந்தனையாக வைக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், ஆட்சியில் பங்கு வேண்டும் எனக்கூறிய விசிக திடீரென ஆட்சியில் பங்கு வேண்டாம் என கூறியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசிக-வை தொடர்ந்து காங்கிரஸின் நிலைபாடு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.



