டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பிரச்சாரத்தை மத்திய ஓய்வூதிய அமைச்சகம் இம்மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது.
நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பிரச்சாரத்தை மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இம்மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்கும் வகையிலும், ஓய்வூதியம் தொடர்பான அனைத்து அம்சங்களையம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பதற்கும் அவர்களது எளிதான வாழ்க்கையை உறுதி செய்வதற்குமான முக்கிய முன்முயற்சியாக இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.
நாடு தழுவிய இந்த இயக்கத்தின்கீழ், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பால்டியில் உள்ள தாகூர் மையத்தில் தொலைத்தொடர்புத்துறை சார்பில் டிஜிட்டல் ஆய்வு சான்றிதழுக்கான மாபெரும் முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு உதவிடும் வகையில், அவர்களது ஆயுள் சான்றிதழ்களை பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மூலம் சமர்ப்பிக்க வகை செய்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் தொடர்பான ஆவணங்களை புதுப்பித்தலுக்கும் உதவிடும்.
2000-க்கும் அதிகமான பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. பயோமெட்ரிக் கருவியின்றி ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தின் கீழ், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலக வங்கிகள் மூலம் அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இந்த சேவையை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.



