ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை, உணவை வெறும் உயிர்வாழ்வதற்கான பொருளாகக் கருதாமல், “உணவே மருந்து” என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு, தூக்கம் மற்றும் சீரான வாழ்க்கை அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் முழு தானியங்கள் ஆகியவை வெறும் ஊட்டச்சத்துக்கான ஆதாரங்கள் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகின்றன.
ஆயுர்வேதத்தின்படி, நாம் உண்ணும் உணவு நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களையும் சமநிலைப்படுத்த வேண்டும். இந்தச் சிறுதானியங்கள் குறிப்பாக வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளன. குளிர் காலத்தில் உடலுக்கு வெப்பத்தைத் தந்து, கபத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. பருப்பு வகைகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. இவை 3 தோஷங்களையும் சமநிலைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அரிசி மற்றும் பார்லி போன்ற தானியங்கள், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன. இன்றைய நவீன காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க, நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவற்றில் உள்ள நார்ச்சத்து, மெதுவாகச் செரிமானம் ஆகும் கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் தாதுக்கள் ஆகியவை நீண்ட கால ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகின்றன. நமது பாரம்பரிய உணவுகள் ஊட்டச்சத்து மிக்கவை மட்டுமல்ல, கலாச்சாரம் மற்றும் மருத்துவ பண்புகள் நிறைந்தவை. எனவே, நமது எதிர்கால சந்ததியினரை நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க, இந்த உணவுகளை மீண்டும் நம் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.
Read More : சிறப்பு முகாம்..!! ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க வேண்டுமா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!