பிரபல யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெக் பாஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான பிரபல யூடியூபர் சுதர்சன், டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனலையும் நடத்தி வருகிறார். மொபைல் போன்கள், லேப்டாப், ஹெட் செட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து யூ டியூபில் விமர்சனம் செய்து இவர் பிரபலமானார்.
இதனிடையே சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த விமலா தேவி என்ற மருத்துவரை சுதர்சன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது 30 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் மற்றும் சீர் வரிசை பொருட்களை சுதர்சன் வரதட்சணையாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெக் சூப்பர் ஸ்டார் யூ டியூப் சேனலில் போதிய வருமானம் இல்லாததால், சுதர்சனின் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுள்ளது.. எனவே வீடு கட்டுவதற்காக கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு தனது கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.. மேலும் ஒரு கட்டத்தில் மனைவி உடன் வாழ முடியாது என்று கூறி தனது காதல் மனைவியை குழந்தை உடன் வீட்டை விட்டு விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுதர்சனின் மனைவி விமலா தேவி அளித்த புகாரின் பேரில் சுதர்சன் மற்றும் அவரின் தாய், தந்தை உள்ளிட்ட 5 பேர் வரதட்சணை கொடுமை வழக்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..