மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து இணக்க நடைமுறைகளும், முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான சுய தணிக்கை உறுதி மொழிக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு தவறான தகவல்களை அளிப்பதிலிருந்தும், அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவதிலிருந்தும் தடுப்பதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்து அடையாளம் காணவும் மதிப்பீடு செய்யவும் முறைகேடுகள் குறித்தும் அறிந்து கொள்ள ஏதுவாக சுயதணிக்கை அல்லது மூன்றாம் நபரின் தணிக்கை நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து 26 நிறுவனங்களும் இதில் மறைக்கப்பட்ட அல்லது முறைகேடான அல்லது தவறான தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



