கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்துக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே, நவம்பர் 1-ம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள், தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும்.
வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெறுவதற்கு https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் பெற்றிடும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆழியார் சோதனை சாவடியிலும், கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் சோலையார் அணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும் இ-பாஸ் பதிவு செய்து, இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை. சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்களான (சொந்த பயன்பாட்டு வாகனங்கள்) இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் சுற்றுலா வாகனம் – https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளத்திற்கு சென்று உள்ளுர் பாஸ் (localite pass) ஒரு முறை மட்டும் பதிவு செய்து கொண்டால் போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



