கண்ணைக் கவரும் இளஞ்சிவப்பு நிறத்தில், அருமையான ருசியுடனும் இருக்கும் ஆப்பிள்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உலகம் முழுவதும் ஆப்பிள்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது சமீபத்தில் 9000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட சாப்பிட்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு வந்துள்ளது. நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களை வராமல் தடுக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஊட்டச்சத்துக்கள்: ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதய ஆரோக்கியம்: தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் அது உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இதனால் இதய நோய் வரும் அபாயம் வெகுவாகக் குறைகிறது. இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.
சிறந்த செரிமானம்: ஆப்பிள் நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதை தினமும் உண்பதால் ஆரோக்கியமான செரிமானம் கிடைக்கும். மலச்சிக்கலை தடுக்க உதவும். குடல் மேம்பாடு அடையும்.
எடை மேலாண்மை: இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது. சிறந்த எடை மேலாண்மைக்கு உதவுகிறது. நீரிழிவு அபாயம் குறைதல்: சில வகையான ஆய்வுகள் ஆப்பிள்களை உட்கொண்டு வந்தால் வகை 2 நீரிழிவு அபாயம் குறைகிறது என்று கூறுகின்றன. எனவே, சர்க்கரை கட்டுக்குள் இருப்பவர்கள் கூட தினமும் நான்கு ஐந்து துண்டுகள் ஆப்பிள் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
இதனால் பருவ கால நோய்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கியம் மேம்படுதல்: வளரும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அவசியம் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட தர வேண்டும். ஏனென்றால், இதில் உள்ள கலவைகள் மூளை செல்களை பாதுகாக்க உதவுவதோடு, நரம்பியக் கடத்தல் நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. இது வயதானவர்களுக்கும் மிகவும் அவசியம். அவர்களுடைய ஞாபக சக்தியை பாதுகாக்கும். சிறந்த நினைவுத்திறனைத் தரும்.
சருமப்பொலிவு: இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு இளமையாகவும் வைக்கிறது. சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மின்னுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு: ஆப்பிளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் சிலவகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
எலும்பு ஆரோக்கியம்: ஆப்பிளில் உள்ள கலவைகள் எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வருபவர்களின் மூட்டுக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன. மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்றவை தள்ளிப் போடப்படுகின்றன.
தினசரி உணவில் ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும். சில வியாபாரிகள் இவற்றிற்கு மெழுகு போன்ற பொருட்களை சேர்ப்பதால் நன்றாக கழுவி விட்டு இதனுடைய தோலை சீவி விட்டு உண்பது நல்லது.