நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
நிலைமை கைமீறி போகவே போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள சிவில் மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நேபாள அமைச்சரவைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட சில சமூக ஊடக தளங்கள் நேபாளத்தின் தேசிய பெருமையை மதிக்காத ஒரு எதிர்வினையை வெளியிட்டுள்ளதாக பிரதமர் அமைச்சரவையில் தெரிவித்தார். காத்மாண்டுவின் நடுவில் நாடாளுமன்றத்தின் முன் பாரிய போராட்டத்தை நடத்திய ‘ஜெனரல் ஜி’ குழுவின் கோரிக்கைகளுக்கு இணங்க, சமூக ஊடக தளங்களை மீண்டும் தொடங்குவதற்கான செயல்முறையைத் தொடங்க தகவல் அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குருங் கூறினார்.
இருப்பினும், சமூக ஊடகங்களைத் தடை செய்யும் முடிவு குறித்து அரசாங்கத்திற்கு எந்த வருத்தமும் இல்லை என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்தார்.