அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தவெகவில் இணைந்த பின்னர், கோபிசெட்டிப்பாளையம் வந்த செங்கோட்டையனுக்கு ஆதரவாளர்கள் சார்பில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் நடைபெறும் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்க இருக்கிறார். குறிப்பாக, கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து 8 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் நீக்கத்திற்கு பின், அதே பகுதியில்தான் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பதால், இது தமிழக அரசியலில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதனால், இந்த பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனை குறித்து மறைமுக விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இன்று நடைபெறும் பிரச்சாரத் தொடக்க பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் இந்த பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதே, அதிமுகவின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
Read more: 10 ஆண்டுகளில் ரூ.17 லட்சம் சம்பாதிக்கலாம்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!



