அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரி, நாளை ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வருகிறது.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கா ஏற்கனவே 25% வரி விதித்திருந்தது. இப்போது அதற்கு மேலாக மேலும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் 40% க்கும் அதிகமான பகுதி ரஷியாவிலிருந்தே பெறப்படுகிறது. இதனால், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு, இந்தியாவுக்கு பெரிய பொருளாதார சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது’ என அது தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், வரும் வாரங்களில் “மிகப்பெரிய விளைவுகள்” ஏற்படும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட பிற நாடுகள் மீது அமெரிக்கா தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.