தான்சானியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கடும் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. அந்நாட்டில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், ஆட்சியிலிருக்கும் அதிபரின் முக்கிய எதிரிகள் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தான்சானியா அதிபர் சாமியா சுலூஹு ஹசன், இரண்டாவது பதவிக்காலத்திற்காக போட்டியிடுகிறார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில், இரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடத் தடைசெய்யப்பட்டதால், அவர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் 272 தொகுதிகளில் 120 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன; அதில் ஹசன் சுமார் 97% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சி சடேமா (Chadema) கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எங்கள் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்; மோதல்களில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்..” என்று தெரிவித்தார்.
புதன்கிழமை தொடங்கிய போராட்டங்களை அடக்க, பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளன. தர்இஸ் சலாம் நகரின் தெருக்களில் இன்னும் கவச வாகனங்கள் ரோந்துப் போகின்றன. தேர்தல் நாளிலிருந்து இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது; இன்னும் சரியாக மீட்கப்படவில்லை.
தான்சானியா இராணுவத் தளபதி ஜேக்கப் முகுண்டா (Jacob Mukunda) பேசிய போது “ போராட்டங்களில் பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகள் சேதமடைந்துள்ளன. இது ஏற்க முடியாதது; இனி இது தொடர அனுமதிக்க முடியாது.” என்று தெரிவித்தார்..
அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, சுமார் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சடேமா கட்சித் தலைவர் துண்டு லிசு (Tundu Lissu) கடந்த ஏப்ரல் மாதம் முதல் துரோகக் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்; கட்சியின் துணைத் தலைவர் ஜான் ஹெச்சே (John Heche) தற்போது காவலில் உள்ளார்.
போராட்டங்கள் தொடர வாய்ப்பு
“மாற்றம் மற்றும் சீர்திருத்தம்” குறித்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டக்காரர்கள் பின்வாங்க மாட்டார்கள் என சடேமா கட்சி தெரிவித்துள்ளது..
ஐ.நா. கவலை
ஐக்கிய நாடுகள் (UN) வன்முறையைப் பற்றிய “நம்பத்தகுந்த அறிக்கைகள்” கிடைத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், பாதுகாப்பு படைகள் “அதிகப்படியான வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” எனவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய கலவரம், ஆப்பிரிக்காவின் முக்கியமான செம்பு ஏற்றுமதி நாடுகளான ஜாம்பியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றின் பொருட்கள் கடத்தும் தான்சானியாவின் இந்தியப் பெருங்கடல் துறைமுகத்தின் செயல்பாட்டையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.



