தொழிற்சாலைகள், குடிசை மற்றும் குறுந்தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வாரியத்துக்கு வழங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத் தவிர தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட், உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவுக்கு யூனிட் ரூ.8.55-இல் இருந்து ரூ.8.80-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிசை தொழில், குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட் ரூ.4.80-ல் இருந்து ரூ.4.95-ஆகவும்; 500 யூனிட்டுக்கு மேல் ரூ.6.95-ல் ரூ.7.15-ஆகவும் அதிகரித்துள்ளது. விசைத்தறிக்கு 500 யூனிட் வரை ரூ.6.95-ல் இருந்து ரூ.7.15-ஆக அதிகரித்துள்ளது.
தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.8.25-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்காலிக மின் இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.12.85-ல் இருந்து ரூ.13.25-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் வீடுகள் உட்பட 2.83 கோடி நுகர்வோருக்கு மின்கட்டண உயர்வு இல்லை. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.520 கோடி கூடுதல் செலவாகும். இந்த தொகையை மின் வாரியத்துக்கு அரசு வழங்கும். அதன்படி, 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும்.
இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின்நுகர்வோர், 50 கி.வா. வரை ஒப்பந்த பளு கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகள், குடிசை மற்றும் குறுந்தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வாரியத்துக்கு வழங்கும். விசைத்தறி நுகர்வோருக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.