அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு தடையாக கருதி, ஈரான் அவரைக் கொல்ல இரண்டு முறை முயற்சி செய்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அமெரிக்காவின் செயல்களை அவர்களை விரும்பவில்லை. அமெரிக்காவிற்கு மரணம் என்று முழக்கமிடும் இந்த மக்கள், அதிபர் டிரம்ப்பை இரண்டு முறை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இனியும் அவர்கள் இதை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கைகளில் அணு ஆயுதங்கள் சென்றால் எவ்வளவு மோசமாக இருக்கும். டிரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர் என்றார்.
ஈரான் தனது நாட்டிற்கு எதிராக உடனடி அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் தான் இஸ்ரேல் அக்கறையுடன் தாக்குதல் நடத்தியதாகவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “இது 12வது மணி நேரம். நாம் செயல்பட தவறினால், நம்மை பாதுகாப்பது கடினமாகிவிடும்” என்றார்.
நெதன்யாகு கூறிய முக்கியக் கூறுகள்: ஈரான், அணுகுண்டு தயாரிக்கத் தகுந்த அளவில் யுரேனியம் செறிவூட்டியுள்ளது. அதே நேரத்தில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் எண்ணிக்கையை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது ஆண்டுக்கு 3,600 ஏவுகணைகள், மூன்று ஆண்டுகளில் 10,000 ஏவுகணைகள், 26 ஆண்டுகளில் 20,000 ஏவுகணைகள் வரை வளரலாம் என அவர் எச்சரிக்கை செய்தார்.
ஒவ்வொரு ஏவுகணையும் பல நகரங்களை தாக்கும் திறன் கொண்டது. “இஸ்ரேல் போல் சிறிய நாடு இதை தாங்க இயலாது. அதனால் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்றார். கடந்த ஜூன் 12 அன்று, இஸ்ரேல் ஈரானில் உள்ள முக்கிய அமைப்புகளை ஏவுகணைகளால் தாக்கியது. அதற்குப் பதிலளிக்க, ஈரான் இஸ்ரேலின் நகரங்களை பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியது. இருப்பினும், பல ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டன.
இஸ்ரேல் தனது நடவடிக்கைகள் மூலம் உலகையே பாதுகாக்கிறது, என நெதன்யாகு வலியுறுத்தினார். ஈரானின் அணு ஆயுத, ஏவுகணைத் திட்டங்களை முற்றிலும் அழிக்க வேண்டியதுதான் என்றும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஆட்சியுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என்றும் அவர் கூறினார்.