எவரெஸ்ட் மசாலா பொருட்களில் ஆபத்தான அளவில் பூச்சிக்கொல்லிகள்..! இந்த நோய்களை ஏற்படுத்தும்..! நிபுணர்கள் வார்னிங்..!

everest masala

பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் எவரெஸ் (Everest) தயாரிப்புகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தயாரிப்புகள் ஆய்வக பரிசோதனையில் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த வீடியோவில் முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த சர்ச்சை, Trustified என்ற யூடியூப் சேனல் 2026 மார்ச் 1-ம் தேதி வெளியிட்ட வீடியோவால் தொடங்கியது. அந்த வீடியோவில், Everest நிறுவனத்தின் பல மசாலா பொருட்கள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவை இந்திய உணவு பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்கிறதா என்பதை சரிபார்க்க முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.

இதற்காக, அந்த சேனல் D-Mart கடையில் இருந்து மசாலா பொட்டலங்களை வாங்கி, அவற்றிலிருந்து எடுத்த மாதிரிகளை சுயாதீன ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததாக விளக்கப்பட்டது. இந்த தரநிலைகளை நிர்ணயிப்பது Food Safety and Standards Authority of India (FSSAI) ஆகும்.

ஒவ்வொரு தயாரிப்பிலும் மூன்று பெட்டிகள் வாங்கப்பட்டு, அவற்றில் இருந்து ஒரு பொட்டலம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது என்று அந்த யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.. ஆய்வு செய்யப்பட்ட தயாரிப்புகளில் எவரெஸ்ட் கரம் மசாலா, எவரெஸ்ட் கிட்சன் கிங் மசாலா, எவரெஸ்ட் காஷ்மீரி மிளகாய்ப் பொடி, எவரெஸ்ட் கரி மசாலா ஆகியவை அடங்கும்.

ஆய்வகத்தில் கிடைத்ததாக கூறப்படும் முடிவுகள் சில கவலைக்கிடமான விஷயங்களை வெளிப்படுத்தியதாக அந்த வீடியோ கூறுகிறது. குறிப்பாக, சில மாதிரிகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சில ரசாயனங்கள் FSSAI நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அளவை விட அதிகமாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

எவரெஸ்ட் மசாலா பொருட்கள் இந்தியாவின் பல வீடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுவதால், இந்த தகவல் சமூக வலைதளங்களில் விரைவாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. உணவு பாதுகாப்பு மற்றும் பாக்கெட் மசாலா தயாரிப்புகளின் தரநிலை குறித்து பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கினர்.

வீடியோவில் காட்டப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, எவரெஸ்ட் கரம் மசாலா மாதிரியில் அசிடமிப்ரிட் மற்றும் அசோக்ஸிஸ்ட்ரோபின் என்ற இரண்டு பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாதிரியில் என்டோரோபாக்டீரியாசி குடும்பத்தைச் சேர்ந்த பாக்டீரியா அளவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எவரெஸ்ட் கிச்சன் கிங் மசாலா மாதிரியில் கூட என்டோரோபாக்டீரியாசி பாக்டீரியா அளவு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதோடுதியாமெதோக்சம், கார்பென்டாசிம்/பெனோமைல் மற்றும் கார்பென்டாசிம் என்ற மூன்று வகை பூச்சிக்கொல்லி ரசாயனங்களும் பாதுகாப்பு அளவை மீறி இருந்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு தயாரிப்பான எவரெஸ்ட் காஷ்மீரி மிளகாய் மசாலா குறித்து வந்த தகவலின்படி, அதில் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கண்டறியப்படவில்லை. ஆனால் அந்த மாதிரியில் கூட என்டோரோபாக்டீரியாசி பாக்டீரியா அளவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தயாரிப்பு செயல்முறை அல்லது கையாளும் முறையில் ஏற்பட்ட மாசுபாட்டை சுட்டிக்காட்டலாம் என கூறப்படுகிறது.

நான்காவது தயாரிப்பான எவரெஸ்ட் மட்டன் கரி மசாலா மாதிரியில் எத்தியோன், டெபுகோனசோல், அசோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் ஃப்ளூபிராம் போன்ற பல பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் பாதுகாப்பு அளவை மீறி இருந்ததாகவும், அதில் பாக்டீரியா அளவும் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளமான X தளத்திலும் பேசப்பட்டது. அங்கு ஒருவர் Grok என்ற AI என்டோரோபாக்டீரியாசி பாக்டீரியா குடும்பம் மற்றும் அதன் உடல்நல விளைவுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த பாக்டீரியா குடும்பத்தில் ஈ. கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற உணவு மாசுபாட்டுடன் தொடர்புடைய கிருமிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த Grok, என்டோரோபாக்டீரியாசி குடும்பத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் வயிற்று தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று விளக்கியது. இந்த கிருமிகள் உள்ள உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் உணவு விஷத்தன்மை போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று கூறப்பட்டது.

உணவு பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதன்படி, மசாலா பொருட்களில் என்டோரோபாக்டீரியாசி பாக்டீரியா இருப்பது சுகாதார நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளை காட்டக்கூடும். அதாவது, மூலப்பொருட்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கலாம் அல்லது அவை போதுமான அளவு உலர்த்தப்படாமல் இருந்திருக்கலாம். இப்படியான சூழ்நிலைகள் பாக்டீரியா வளர்வதற்கு வழிவகுக்கும்.

மேலும், அதிக அளவு பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் உள்ள உணவுகளை நீண்ட காலமாக உட்கொள்வது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ரசாயனங்கள் உடலில் சேர்ந்து கல்லீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புகளை பாதிக்கக்கூடும். மேலும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இத்தகைய அபாயங்களுக்கு அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : 12 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் 31 வயது நபரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..! முக்கிய தீர்ப்பு..!

RUPA

Next Post

கேஸ் சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு.. மோடி அரசின் முக்கிய அறிவுரைகள்.. இதை உடனடியாக செய்ய வேண்டுமா?

Wed Mar 11 , 2026
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோக முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 10 அன்று அனைத்து வீட்டு எரிவாயு நுகர்வோருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது. ஒவ்வொரு வீட்டு எரிவாயு நுகர்வோரும் தங்கள் e-KYC செயல்முறையை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை முடிந்ததும், எரிவாயு மானியம் மற்றும் விநியோக […]
cylinder 2025

You May Like