காதலை ஏற்க மறுத்த பெண்ணை சாலையில் ஸ்கூட்டியால் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரா என்ற இளைஞர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையில் நல்லுறவு இருந்து வந்த நிலையில், சமீபத்தில் சில காரணங்களால் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் உறவை முறித்துக்கொண்டு பிரேக்கப் செய்துவிட்டார்.
ஆனால், பிரேக்கப்பை ஏற்றுக்கொள்ள முடியாத ராஜேந்திரா, தொடர்ந்து அந்தப் பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். பலமுறை அவர் காதலை ஏற்க மறுத்தும், ராஜேந்திரா தொடர்ந்து பின் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை ஸ்கூட்டியில் வந்த ராஜேந்திரா, பின் தொடர்ந்து சென்றுள்ளார். என் பின்னாள் வராதே எனக் கூறி அந்த பெண் கல்லை வீச, ஆத்திரமடைந்த இளைஞன் ஸ்கூட்டியை அந்த பெண் மீது ஏற்றி தப்பி சென்றுவிட்டார்.
இந்த தாக்குதலில் அந்தப் பெண் சாலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழு நிகழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காதலை ஏற்காததால் இவ்வாறு தாக்குதல் நடத்திய சம்பவம் மக்களிடையே கண்டனத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் ராஜேந்திராவை கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.