வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், மூன்று மாநிலங்களின் சந்திப்பாக திகழும் முக்கிய பகுதி. இங்கிருந்து மைசூர் நோக்கி ஒரு தேசிய நெடுஞ்சாலையும், வயநாடு, மலப்புறம் நோக்கி மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இதனால் கூடலூர் பகுதியில் இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்களை சுமக்கும் சரக்கு வாகனங்கள் கூடலூர் வழியாக கடந்து செல்வதோடு, வெளிமாநில சுற்றுலா பயணிகளும் ஊட்டி செல்வதற்காக கூடலூரை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, இந்த பகுதி போக்குவரத்து மையமாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் கூடலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சில போலீசார் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உடனடியாக விசாரணை மேற்கொண்டார். ஆரம்பத்தில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுலைமான் ஐ ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடத்தப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து, சுலைமான் மற்றும் அவருடன் பணியில் இருந்த காவலர் வினோத் ஆகியோர் இருவரும் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Read more: மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறும்.. எதையெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா..?