தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.
இந்திய அளவில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழக அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது. இந்த நிலையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தேர்வர்களுக்கான சேவைகளை இணைவழியில் வழங்கும் விதமாக தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் இச்சட்டத்தின்கீழ் மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை https://rtionline.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் சமர்ப்பிக்கலாம். எனவே, தேர்வர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்கள் மற்றும் மேல் முறையீடு்களை தேர்வாணை யத்துக்கு தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



