ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சில செய்திகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வருகின்றன. ஆனால் சில செய்திகள் வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகப் போலியாகப் பரப்பப்படுகின்றன. எனவே ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகளும் அறிவிப்புகளும் வரும்போது பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இந்த சூழலில் 500 ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செல்லாது என்ற ஒரு தகவல் வாட்ஸ் ஆப்பில் பலரால் பகிரப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி 75% அளவுக்கும், அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 90% அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் குறைத்து விட வேண்டும் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.
இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு (Fact Check Unit) ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தது. அதில் 500 ரூபாய் நோட்டுகளை நிறுத்தம் செய்வது தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அரசு தரப்பில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.