சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீசாரான பிரபு, கண்ணன், சங்கர் மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. இந்த வழக்கு தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை பெற்றனர். இதனைத்தொடர்ந்து மதுரை மற்றும் திருப்புவனத்தில், அஜித்குமாரை அடைத்து வைத்து தாக்குதல் நடத்திய இடங்களில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. காவலர்கள், உயிரிழந்த அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்து சென்ற வாகனத்தில் போலி பதிவு எண்ணானது பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. TN 01 G 0491 என்ற பதிவு எண்ணிற்கு பதிலாக TN 63 G 0491 என்ற போலி எண் அந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த டெம்போ வாகனத்திலிருந்து மதுபான பாட்டில்கள் மற்றும் சீட்டுக்கட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அஜித்குமார் வழக்கில் அடுத்தடுத்து பல உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
Read More: இ-சலான்கள் மூலம் நடக்கும் மோசடி..! எது போலி… எது உண்மை…? மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…!