பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுமி மூன்று நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகலாத் மேகர் (41) என்பவர், தன்னை ஒரு தாந்திரீகர் எனக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வலம் வந்துள்ளார். துஷ்ட சக்திகளை அகற்றும் பூஜைகள், கடன் தொல்லைகள் நீங்கும் என நம்பிக்கை ஏற்படுத்தி பொதுமக்களில் புகழ் பெற்று வந்த இவர், தற்போது போலி சாமியார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் தெரிவித்த தகவலின் படி, கடந்த ஜூன் 22ஆம் தேதி, ஒரு சிறுமியை அவரது ஆசிரமத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். “சிறுமியின் மீது துஷ்ட சக்தி உள்ளது. அதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம்” எனக் கூறி, பூஜை செய்வதற்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு பிறகு சிறுமி மற்றும் சாமியார் இருவரும் காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ஜூன் 26ஆம் தேதி சிறுமி மீட்கப்பட்டார். விசாரணையில், மூன்று நாட்களுக்கு மேல் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்முறை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரகலாத் மேகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஜலாவர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மாநிலமெங்கும் பெரும் பரபரப்பையும், மக்கள் கோபத்தையும் கிளப்பியுள்ளது.