பொதுவாக ஒருவர் படுக்கையில் படுத்த பிறகு 10–20 நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவது இயல்பானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்துக்குள் தூக்கம் வந்துவிட்டால், உங்கள் தூக்க பழக்கம் உடலின் உள் கடிகாரம், தூக்க அழுத்தம் (sleep pressure) மூன்றும் சரியான சமநிலையில் வேலை செய்கின்றன என்பதற்கான அறிகுறி அது.
இதன் அர்த்தம், உங்கள் உடல் மெதுவாக தளர்ந்து, மூளை விழிப்பிலிருந்து ஓய்வுக்குச் சரியாக மாறுகிறது என்பதாகும். அதேபோல், நேரத்துக்கு உணவு சாப்பிடுதல், இரவு நேரங்களில் காபி/டீ போன்ற கஃபைன் தவிர்த்தல் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கம், இவையெல்லாம் சரியாக இருந்தால், இவ்வாறு இயல்பாக தூக்கம் வரும்.
ஆனால் 2–5 நிமிடங்களுக்குள் உடனே தூங்கிவிட்டால்?
இது எச்சரிக்கை அறிகுறி ஆக இருக்கலாம் என்று டாக்டர் அமித் சரஃப் கூறுகிறார்.
படுக்கையில் படுத்தவுடன் உடனே தூங்கிவிடுவது என்றால், உடலுக்கு தூக்கம் மிகக் குறைவாக கிடைக்கிறது என்பதைக் காட்டும். உடல், இழந்த தூக்கத்தை ஈடு செய்ய முயற்சிக்கிறது. இது பொதுவாக, மாணவர்கள், ஷிஃப்ட் வேலை செய்யும் பணியாளர்கள், அதிக வேலைச்சுமை உள்ள பெரியவர்கள் இவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
மேலும் என்ன பிரச்சினைகள் இருக்கலாம்?
சில நேரங்களில், இவ்வாறு உடனே தூங்கிவிடுவது:
தூக்கத்தின் போது மூச்சுத்திணறல்
தூக்கத்தின் தரம் குறைவு
பகல் நேரத்தில் அதிக சோர்வு
போன்ற பிரச்சினைகளையும் குறிக்கலாம்.
நீங்கள் உடனே தூங்கினாலும், காலை எழும்போது சோர்வாகவே இருந்தால் அது ஒரு தூக்க கோளாறு இருக்கலாம் என்பதற்கான அறிகுறி. அப்படி இருந்தால், மருத்துவரை அணுகி மேலதிக பரிசோதனை செய்வது நல்லது.
10–20 நிமிடங்களில் தூங்குவது – நல்ல தூக்க ஆரோக்கியம்
2–5 நிமிடங்களில் உடனே தூங்குவது – தூக்கக் குறைவு அல்லது உடல்நல எச்சரிக்கை
உங்கள் தூக்க முறையை கவனிப்பது மிகவும் முக்கியம்.
மிக விரைவாக தூங்கிவிடுவதால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சினைகள்
ஒருவர் படுக்கையில் படுத்த சில நிமிடங்களிலேயே (2–5 நிமிடங்களில்) தூங்கிவிட்டால், அதற்கு பின்னால் சில உடல்நலக் காரணங்கள் இருக்கலாம். அவை:
நீண்டகால தூக்கக் குறைபாடு (Chronic sleep debt):
தினமும் போதுமான தூக்கம் கிடைக்காமல் இருந்தால், மூளை மிகுந்த சோர்வில் இருக்கும். அதனால் படுத்தவுடனே “ஆஃப்” ஆகி உடனே தூங்கிவிடும்.
தரமற்ற தூக்கம் (Poor sleep quality):
இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதது போன்றவை இருந்தால், அடுத்த இரவு உடல் அதிக சோர்வாக இருந்து விரைவில் தூங்கிவிடும்.
ஸ்லீப் அப்னியா (Sleep apnea):
தூங்கும்போது மூச்சு அடிக்கடி தடைபடுவது காரணமாக, தூக்கம் முழுமையடையாது. இதனால் பகல் நேரங்களில் அதிக தூக்கத்தையும், இரவில் உடனடி தூக்கத்தையும் ஏற்படுத்தும்.
மனநிலைச் சிக்கல்கள் (Mood disorders):மனச்சோர்வு, பதட்டம் (anxiety) போன்றவை தூக்க முறையை பாதிக்கும். நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்த உடல், ஓய்வு கிடைக்கும் போதே விரைவாக தூங்கிவிடும்.
அதிக மன அழுத்தம் (High stress):
மன அழுத்தம் காரணமாக கார்டிசோல் (stress hormone) அளவு மாறும். இது இரவில் விழிப்புணர்வை குறைத்து, திடீரென தூக்கம் வர காரணமாகும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை காணுவது அவசியம்:
மிக விரைவாக தூங்கிவிட்டாலும், பகலில் எப்போதும் சோர்வாக இருப்பது
காலை எழும்போது தலைவலி இருப்பது
துணைவர் சொல்வதுபோல், தூங்கும்போது அதிக சத்தமாக குறட்டை விடுவது
தூக்கத்தில் மூச்சு நிற்பது போன்ற இடைவெளிகள் இருப்பது
இவ்வாறான சூழ்நிலைகளில், தூக்கப் பரிசோதனை (sleep assessment) அல்லது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவையா என்பதை மருத்துவர் சரிபார்ப்பார். இது பழக்கவழக்கச் சிக்கலா அல்லது உள்ளார்ந்த உடல்நலப் பிரச்சினையா என்பதை கண்டறிய உதவும்.



