தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் வழியாக ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை அடையும் வகையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் (PCARDB) மூலமாக பொதுமக்களுக்கு நீண்ட கால கடன்கள் (Long Term Loans) வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன்களுக்கான மதிப்பீட்டு தொகையை உயர்த்தி, கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அல்லது சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த சலுகை புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கு நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ரூ.50 கோடி மதிப்பிலான நீண்ட கால கடன்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு முகாம்களில் தகுதியுடைய உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். குறிப்பாக வேளாண் இயந்திர மயமாக்கல், குளிர் பதன கிடங்குகள் அமைத்தல், கறவை மாடு, ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, மற்றும் அறுவடைக்கு பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும்.
இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமை துறை கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் தங்கள் பகுதி தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை அணுகலாம். விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாள அட்டை, முகவரி சான்று, கேஒய்சி (KYC) ஆவணங்கள் மற்றும் நில அடமான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Read More : ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி? வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்! முழு விவரம் உள்ளே!



