நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவர் மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று அருள்ஜோதி மகள்களை காப்பாற்றி வந்துள்ளார்.
மகன் உயிரிழந்ததை பயன்படுத்திக் கொண்ட மாமனார் சேட்டு (65) மருமகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமது பெற்றோரிடம் சொல்லி அழுத அந்தப் பெண் ஒவ்வொரு முறையும் வேறு பகுதிக்கு வீட்டை மாற்றி சென்றுள்ளார். வாடகை வீடு மாற்றி வந்தாலும் சேட்டு விடுவதாக இல்லை. தொடர்ந்து அவர் செல்லும் இடத்தை கண்டுபிடித்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முள்ளுக்குறிச்சி பகுதிக்கு அந்தப் பெண் வீடு மாறி சென்ற நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மருமகளை தேடி மாமனார் சென்றுள்ளார். தனியாக வசித்து அருள்ஜோதி இடம் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அருள்ஜோதி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் முடிந்த மாமனார் சேட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகளை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
அருள் ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அருள்ஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருள்ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சேட்டுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாமனாரால் மருமகள் பாலியல் தொல்லை கொடுத்து குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: காலில் இந்த அறிகுறிகள் தோன்றினால் கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கலாம்..!! உடனே டாக்டரை பாருங்க..