2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஃபிடே (FIDE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போட்டிக்கான நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2025 உலகக் கோப்பையில் 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா கடைசியாக இந்த நிகழ்வை 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தியது. அப்போது, சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டும், போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற உள்ளது. தோல்வியடையும் வீரர் ஒவ்வொரு சுற்றிலும் வெளியேற்றப்படுவார். 2021 முதல் ஒற்றை நீக்குதல் வடிவமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் நீடிக்கும். இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள், தேவைப்பட்டால் மூன்றாவது நாளில் டை-பிரேக் நடைபெறும்.
போட்டியின் முதல் சுற்றில், முதல் 50 வீரர்களுக்கு பை வழங்கப்படும். 51 முதல் 206 வரையிலான வீரர்கள் போட்டியாடுவார்கள். இந்த உலகக் கோப்பியின் சிறப்பம்சம் என்னவென்றால் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2026-ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவார்கள். இதன் மூலம் உலக சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை நோக்கி அவர்கள் பயணிக்க முடியும்.
உலக சாம்பியனான டி. குகேஷ், 2023 உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர். பிரக்ஞானந்தா, தற்போது உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கவிருக்கின்றனர். மேலும், உலக தரவரிசை முதலிடத்தை வகிக்கும் மேக்னஸ் கார்ல்சனும் 2023 வெற்றியின் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளார்.
இந்தியா சமீப காலங்களில் பல முக்கிய செஸ் நிகழ்வுகளை நடத்தி வருவதால், இம்முறை உலக கோப்பை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022 செஸ் ஒலிம்பியாட், டாடா ஸ்டீல் செஸ் இந்தியா, 2024 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், மற்றும் மகளிர் கிராண்ட் பிரிக்ஸின் 5வது லெக் போன்ற நிகழ்வுகள் அதன் சான்றுகள். FIDE தலைமை நிர்வாக அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறுகையில், “சதுரங்கத்தின் மீது ஆழமான ஆர்வமும் ஆதரவும் கொண்ட நாடான இந்தியாவிற்கு FIDE உலகக் கோப்பை 2025 ஐக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று தெரிவித்தார்.
Read more: ஈஸியா உடல் எடையை குறைக்கணுமா? தினமும் இந்த ஒரு பானத்தை குடித்தால் போதும்..