எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது..
108 அவசர ஊர்தி ஓட்டுனர் மற்றும் ஊழியர்களின் உயிருகும் உடைமைக்கும் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த மனுவில் “ கடந்த 28-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் கூட்டத்தில், உள்நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்த போது, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரே நோயாளியாக மாறி ஆம்புலன்ஸில் செல்வார் என்று மிரட்டல் விடுத்தார்..
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், எந்த நடவடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. கடந்த 24-ம் தேதி திருச்சி கூட்டத்தில், மயங்கி விழுந்த ஒருவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்த போது, கூட்டத்தில் இருந்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கி ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர்.. இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகாரளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் முடியும் வரை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்..” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது..
இந்த மனு இன்று மதுரைக்கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், மனு தாரர் கோரிக்கை தீவிரமான கோரிக்கையாக உள்ளது.. இதனை எப்படி பொதுவான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினர்.. ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல என்று கண்டனம் தெரிவித்தனர்.. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்..
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்படுவது பாதுகாப்பு பிரச்சனை என்பதால், வழக்கில் டிஜிபி என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பது குறித்து பதில் மனு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் வழக்கை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்..



