இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் செயல்பட்டு வந்த ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்தனர்.
ஒற்றை மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த அந்த முதியோர் இல்லத்தில், முதியோர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் வயதானவர்கள் வெளியேறிய முடியாமல் விடுதிக்குள் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலம்சியா ஹசிபுவான் கூறுகையில், இந்த கோர விபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் மனாடோவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தீ விபத்து குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து, ஆறு தீயணைப்பு லாரிகளுடன் வந்த வீரர்கள் தீயை முழுமையாக அணைக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டனர். தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என காவல்துறையின் ஆரம்ப அறிக்கை தெரிவித்திருந்தாலும், தீ விபத்திற்கான துல்லிய காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more: உலகின் மிகவும் விலை உயர்ந்த வைரம் ஏன் சபிக்கப்பட்டது? கோஹினூர் வைரம் ஏன் துரதிர்ஷ்டவசமானது?



