மத்திய அரசு இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல் தலைமுறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.. இந்த புதிய திட்டம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.. அதன்படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவுசெய்த முதல் தலைமுறை ஊழியர்கள் புதிதாக தொடங்கப்பட்ட PM விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா (PM-VBRY) திட்டத்தின் கீழ் ரூ.15,000 பெறுவார்கள்.
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளித்ததாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
பாரத் ரோஸ்கர் யோஜனா என்றால் என்ன?
பாரத் ரோஸ்கர் யோஜனா என்பது நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் புதிய வேலைகளை உருவாக்க ஊக்குவிக்கும் ஒரு அரசுத் திட்டமாகும். பல்வேறு துறைகளில், குறிப்பாக உற்பத்தியில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோள். வேலைவாய்ப்பு சார்ந்த மேம்பாட்டின் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாரத் ரோஸ்கர் யோஜனா எவ்வாறு செயல்படுகிறது?
இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, ஒன்று முதல் முறையாக ஊழியர்களுக்கு மற்றும் மற்றொன்று முதலாளிகளுக்கு:
பகுதி A: முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை
முதல் தலைமுறை பணியாளர்களாக வேலைக்கு சேர்ந்து EPFO இல் பதிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். தகுதியுள்ள ஊழியர்கள் (ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்) 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் தொடர்ச்சியான சேவைக்குப் பிறகு இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் ரூ. 15,000 வரை EPF ஊதியப் பலனைப் பெறுவார்கள். இரண்டாவது தவணையைப் பெற, ஊழியர்கள் நிதி கல்வியறிவு திட்டத்தையும் முடிக்க வேண்டும். இந்த ஊக்கத்தொகையின் ஒரு பகுதி சேமிப்புக் கணக்கில் அல்லது சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் கருவியில் ஒதுக்கி வைக்கப்படும், பின்னர் திரும்பப் பெறலாம்.
பகுதி B: நிறுவனங்களுக்கான ஆதரவு
குறிப்பாக உற்பத்தித் துறையில் புதிய தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மாதத்திற்கு ரூ. 3,000 வரை ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்த ஆதரவு இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும், மேலும் உற்பத்தி பிரிவுகளுக்கு, ஊக்கத்தொகை காலம் மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய, EPFO-வில் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகள் புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 50க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட வணிகங்கள் குறைந்தது இரண்டு புதிய தொழிலாளர்களைச் சேர்க்க வேண்டும், அதே நேரத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வணிகங்கள் குறைந்தபட்சம் 5பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
முதல் தலைமுறை ஊழியர்கள் ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை (ABPS) பயன்படுத்தி நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் தங்கள் ஊக்கத்தொகையை பெறுவார்கள். இதற்கிடையில், நிறுவனங்கள் தங்கள் சலுகைகளை நேரடியாக அவர்களின் PAN-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பெறுவார்கள்.