இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. ஏற்கனவே கடும் மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் சிமியூலு தீவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது, மேலும் சேதம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது..
இந்தோனேசியா பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியை ஒட்டியதால், நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது..
இதனிடையே, சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் பெரும் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.
தற்போது இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிரிழப்பும் அல்லது சொத்துச் சேதமும் பதிவாகவில்லை என்றாலும், நாட்டு முழுவதும் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர்கள் மக்களை கடுமையாகப் பாதித்துள்ளன.
வட சுமத்திரா மாகாணத்தை பெரிதும் தாக்கிய திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். மீட்பு குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை அடைவதற்காக நேரத்துடன் போட்டியிட்டு வருகின்றன. ஆனால், சேதமடைந்த சாலைகள் மற்றும் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை மீட்பு பணிகளை மிகுந்தளவில் தாமதப்படுத்தி வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக வட சுமத்திராவின் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காட்சிகளில், பல வீடுகள் வேகமான வெள்ளநீரில் மூழ்குவதையும், குடும்பங்கள் உயரமான இடங்களுக்கு தப்பிச் செல்ல முயல்வதையும் காண முடிந்தது.
சென்ட்ரல் தபநுலி பகுதியில், நிலச்சரிவுகள் பல வீடுகளை நசுக்கியுள்ளன. கடும் வெள்ளம் சுமார் 2,000 வீடுகளை மூழ்கடித்துள்ளது. மொத்தத்தில், அந்தப் பகுதிகளில் இருந்து 2,800-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Read More : 11 பேர் பலி.. சீனாவில் ஊழியர்கள் மீது ரயில் மோதி விபத்து.. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்து..!



