அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், எம்ஜிஆரின் நெருங்கியவராகவும் திகழ்ந்த செங்கோட்டையன், ஜெயலலிதாவுக்கு எதிர்காலத்தில் வலுவான ஆதரவாளராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்த தகவல். 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக, அவர் மற்றும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. அத்திக்கடவு–அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் புறக்கணித்தது, எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் விலகியது, சமீபத்தில் நடந்த “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” பேரணியிலும் பங்கேற்காதது போன்றவை இதற்கான சான்றுகளாகக் கூறப்படுகின்றன.
இந்நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு செய்தியாளர்களிடம் தனது மனநிலையை வெளிப்படையாகப் பகிர இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்தார். அவர் என்ன பேச போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நியையில், கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், 1972ல் எம் ஜி ஆர் அதிமுகவை துவங்கிய போது கிளை செயலாளராக கட்சி பணியை தொடங்கினேன். 1975ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக எம் ஜி ஆர் நியமித்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேற நினைப்பவர்களை வீடு தேடு சந்திப்பார் எம் ஜி ஆர். அப்படிபட்ட மகத்தான தலைவரால் உருவாக்கப்பட்டது அதிமுக.
எம்.ஜி. ஆருக்கு பிறகு புரட்சி தலைவி அம்மா கட்சியை வழி நடத்தினார். நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஆளுமை மிக்க முதலமைச்சராக ஜெயலலிதா அம்மா திகழ்ந்தார். ஆன்மீகவாதிகளாலும், திராவிடவாதிகளாலும் ஏற்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவிற்கு சோதனை வந்தது. அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுப்படக்கூடாது என்ற ஒற்றை காரணத்தால் சசிகலா அவர்களை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம்.
கால சக்கரத்தால் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2017க்கு பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தோம். 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கட்சியை விட்டு வெளியே சென்றவர்களை இணைக்க முயன்றோம். ஆனால் ஒற்றுமை முக்கியம் என்பதை உணர இபிஎஸ் தயாராக இல்லை.
அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களும் நிபந்தனை இல்லாமல் ஒன்று சேர தயாராக இருக்கிறார்கள். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதை ஏற்படுத்த அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒன்றினைக்க வேண்டும். அப்போது தான் அதிமுக வெற்றி பெற முடியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதை 10 நாட்களில் செய்ய வேண்டும். இபிஎஸ் ஒருக்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் ஒருங்கிணைப்போம் எனக் கூறினார்.
Read more: தினமும் ஒரு கிளாஸ் பாதாம் பால் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..



