2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, பிற கட்சி நிர்வாகிகளை தவெக-வில் இணைக்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து பல ‘பெரிய தலைகள்’ வெளியேற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “முதியோர் இல்லம் ஆகிறதா தவெக ?77 வயதான செங்கோட்டையனை தொடர்ந்து, ஓபிஎஸ் அணியை சேர்ந்த 70 வயதான வைத்தியலிங்கம் நாளை (இன்று) தவெகவில் இணைகிறார்.
கொங்கு பகுதியை அடுத்து, டெல்டாவை கைப்பற்றியது தவெக.” என்று கூறியுள்ளார். அடுத்தடுத்து அரசியல் மூத்த தலைகள் தவெகவை நோக்கி சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக, திமுகவை சேர்ந்த முக்கிய தலைகள் தவெக நோக்கி செல்வது விஜய்க்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இது திமுக மற்றும் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பிளாக் காபி குடித்தால்.. உடம்புல இந்த மாற்றம் எல்லாம் தானா நடக்குமாம்..!



