2024-ஆம் ஆண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், 2024 டிசம்பரில் ராணுவ சட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது.
ராணுவ சட்டம் அறிவிப்புக்குப் பிறகு தன்னை கைது செய்ய வழங்கப்பட்ட கைது வாரண்டை அமல்படுத்த அதிகாரிகளை தடுத்தது, அதிகாரப்பூர்வ ஆவணங்களை போலியாக தயாரித்தது, மேலும் மார்ஷல் லா விதிப்பதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்றத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் யூன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்தது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி பேக் டே-ஹ்யுன், அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் காக்க வேண்டிய முதன்மை பொறுப்பு அதிபருக்கே இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் யூன் அந்த பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகவும், அரசியலமைப்பை மதிக்காத அணுகுமுறையைக் காட்டியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். குற்றவாளியின் குற்றப்பொறுப்பு மிகக் கடுமையானது என்றும் அவர் கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய யூன் சுக் யோலுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியான உடனே நீதிமன்றத்திற்கு வெளியே பேசிய அவரது வழக்கறிஞர் யூ ஜங்-ஹ்வா, இந்த தீர்ப்பு அரசியல் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாகக் கூறி, இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு, யூன் மீது நிலுவையில் உள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் முதலாவது தீர்ப்பாகும். அவர் அறிவித்த ராணுவ சட்டம் வெறும் 6 மணி நேரமே நீடித்தபோதிலும், அது தென் கொரிய சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகின் மிகவும் நிலையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட தென் கொரியாவில் இந்த நிகழ்வு பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
யூன் மீது நிலுவையில் உள்ள கிளர்ச்சி குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை வரை விதிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய வழக்கில் வழங்கப்பட்ட குற்றத் தீர்ப்புகள், அந்த முக்கியமான கிளர்ச்சி வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ சட்டம் அறிவிப்புக்கு பிறகு யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதுடன், அதிபர் பதவியிலிருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார். அவரது நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
இதனிடையே, யூன் தனது நிலைப்பாட்டில் மாற்றமின்றி இருந்து வருகிறார். அவர் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்றும், அதிபராக இருந்த தனது அதிகாரத்தின் வரம்புக்குள் தான் மார்ஷல் லா அறிவித்ததாகவும் வாதிட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகளைத் தடுத்ததை எச்சரிக்கும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் யோன்ஹாப் வெளியிட்ட தகவலின்படி, யூனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனை, சிறப்பு வழக்கறிஞர்கள் கோரிய தண்டனையின் பாதி மட்டுமே ஆகும். மேலும், இந்த தீர்ப்பு கிளர்ச்சி வழக்கின் இறுதி தீர்ப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கிளர்ச்சி வழக்கில், சிறப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே யூனுக்கு மரண தண்டனை கோரியுள்ளதாகவும் யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
Read More : பம்பர் ஆஃபர்..! இந்த காருக்கு ரூ. 42 லட்சம் தள்ளுபடி.. இதன் உண்மையான விலை தெரியுமா..?



