தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் ஜோதிட நம்பிக்கைகள் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு, கிரக நிலைகள் ஆராயப்பட்டு, அதற்கேற்ற பரிகாரங்கள் செய்யப்படுவது இன்று பலரின் வாழ்க்கையில் தீர்மானகரமான அம்சமாக மாறியுள்ளது.
ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களை நீக்கவும், நல்ல பலன்களை அதிகரிக்கவும் இந்த பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் நம்பிக்கையாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியான சீரமைப்பு வழிமுறைகளாகவும் பலரால் பார்க்கப்படுகின்றன. இதுகுறித்து புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் சண்முகம் கூறுகையில், “தமிழகத்தில் குறிப்பாக கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பரிகார தலங்களுக்குப் புகழ்பெற்றவை” என்று தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசி விஸ்வநாதர், சக்கரபாணி, ஆதி கும்பேஸ்வரர் ஆகிய கோயில்கள் ஜாதக தோஷங்களை குறைக்கும் தெய்வீக மையங்களாக கருதப்படுகின்றன. ஆனால், பரிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவை அல்ல; ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட தோஷத்தின் அடிப்படையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடி ஜோதிட முறையில், ஒருவரின் பூர்வ ஜென்ம வினைகள், வாழ்க்கை தடைகள், எதிர்காலச் சவால்கள் போன்றவை ஓலைச்சுவடிகளில் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. அந்த ஓலையின் அடிப்படையிலேயே, பரிகாரம் செய்ய வேண்டிய தலங்கள் மற்றும் முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. பரிகார முறைகளில், கோயில்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், நிதியளவில் இயலாதவர்களுக்கு மாற்றாக அன்னதானம், வஸ்திர தானம், குறிப்பிட்ட மந்திரங்களை தினசரி ஜபித்தல், விரதம் இருப்பது போன்ற ஆன்மீக வழிமுறைகள் இடம்பெறுகின்றன.
திருமணம் தாமதமாகும் பிரச்சனைகளுக்கு திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி போன்ற தலங்கள் பரிகார ஸ்தலங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. வீடு, வாகனம் போன்ற சொத்துகளை வாங்குவதில் தடைகள் ஏற்பட்டால், அதற்குக் காரணமாக செவ்வாய் தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதற்கும் ஜாதகத்தில் தெளிவான பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Read more: கருணை காட்டுங்கள் சனி.. அடுத்த மூன்று மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்..!



