மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷனி ஷிங்னாபூர் கிராமம் மிகவும் விசித்திரமானது. இந்த கிராமத்தில் வீடுகளுக்கும் கோவில்களுக்கும் கதவுகள் கிடையாது. பார்ப்பவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம்.. ஆனால் அங்குள்ள மக்கள் பாரம்பரியமாகவே இந்த பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
300 ஆண்டுகளுக்கு முன்பு, பனஸ்னலா நதியில் வெள்ளம் பெருகிய போது, கருப்பு கல் தோன்றியது. அதிலிருந்து சிவப்பு நிற ரத்தம் பாய்ந்தது. அதைக் கண்ட ஊர் தலைவரின் கனவில் வந்த சனிபகவான், “எனது சிலையை வழிபடுங்கள். ஆனால் அதை கதவு வைத்து அடைக்க கூடாது. நான் உங்கள் ஊரைக் காப்பாற்றுவேன்.” எனக் கூறியுள்ளார்.
அதன்பின்னர், அங்குள்ள கிராமங்களிலும், கோவில்களிலும் கதவுகள் வைக்கவில்லை. பொது கழிவறைகளுக்கு மட்டும் சிறிய திரைகள் வைத்துள்ளனர். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் கடந்த 300 ஆண்டுகளாக, வீடுகள் கதவில்லாமல் இருந்தாலும் ஒரு சிறிய பொருள் கூட திருட்டு போனது கிடையாது. கொள்ளை சம்பவங்களும் நிகழவில்லை.
இந்த கிராமத்திற்கு 2011ம் ஆண்டு தான் பூட்டு இல்லாத வங்கி தொடங்கப்பட்டது. நம் ஊர்களில் இருப்பது போல கிரில் கேட்டுகள் ஏதுமின்றி, ஒரு கண்ணாடி நுழைவாயிலையும், கிராம மக்களின் நம்பிக்கைகளை மதித்து, அதே நேரம் பாதுகாப்பிற்காக ஒரு கண்ணுக்குத் தெரியாத ரிமோட் கண்ட்ரோல் மின்காந்த பூட்டுடனும் வங்கி நிறுவப்பட்டது.
அந்த கிராமத்தில் 2015ம் ஆண்டுதான் காவல் நிலையம் நிறுவப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு குற்ற நிகழ்வுக்கூட அங்கு பதிவாகவில்லை. இதற்கு அந்த மக்கள், கிராமத்தை சனிபகவான் காத்து வருகிறார் என்று கூறுகிறார்கள். கேட்பதற்கு வித்தியாசமாக தோன்றினாலும் இந்தக் கிராமத்தின் நம்பிக்கை மக்களுக்கு பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை கொடுக்கிறது.