மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், ரூ.1194 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் “ மேட்டூர் அணையில் குறித்த தேதி தண்ணீர் திறந்ததுடன், கல்லணையையும் நேற்று திறந்து வைத்தேன். விவசாயிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2021-ம் ஆண்டு முதல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு தொகுப்பு திட்டங்களுக்கு ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்டா அல்லாத மாவட்டங்களும் பயன்பெறும் வகையில், நெல் சாகுபடிக்காக 132 கோடி நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு தொகுப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தஞ்சையையும் கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது.. ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர்.. மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை வைத்தவர் அவர்.. காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர்.. காவிரி ஆணையம் அமைக்க காரணமானவர்.. இடைக்கால, இறுதி தீர்ப்பையும் பெறார். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியவர்.
தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரத்தநாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 70 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். பட்டுக்கோட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. திருவையாறு புறவழி சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணியில் சீர் மரபினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அடையாள அட்டை வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தஞ்சை மண்ணில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்டங்கள் சேர்ந்துள்ளது. மக்களாகிய நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் தெரிந்து கொள்ள முடிகிறது. இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளையும் மறைப்பதற்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். நகரப்பகுதிகளில் 3768 முகாம்கள், 6232 முகாம்கள் என மொத்தம் 10000 முகாம்கள் நடத்தப்படும். இதில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும்.
உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றி விளக்குவார்கள், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்களை சேர்க்க வேண்டும், தகுதி வரம்பு என்ன ஆகியவை குறித்து விளக்குவார்கள்.. இப்படி நாளும் பொழுதும் மக்களின் குறைகளை தீர்த்துக் கொண்டிருக்கும் நம்மை பார்த்தால் எதிர்க்கட்சி தலைவருக்கு வயிறு எரியத்தானே செய்யும்” என்று தெரிவித்தார்.