பொதுவாகவே தமிழ்நாட்டில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.. அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. சரி.. இதுவரை விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின? விரிவாக பார்க்கலாம்..
புதிய கீதை
2003-ம் ஆண்டு இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் புதிய கீதை.. முதலில் இந்த படத்திற்கு கீதை என்று பெயர் வைக்கப்பட்டது.. ஆனால் இந்துத்துவா அமைப்புகள் இந்த பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய கீதை என்று பெயர் மாற்றப்பட்டது.
காவலன்
2011-ம் ஆண்டு மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான பாடிகார்டு படத்தின் தமிழ் ரீமேக்காக காவலன் படம் உருவானது.. இந்த படம் வெளியாகும் முன்னரே பல சிக்கல்களை சந்தித்தது.. விஜய்யின் முந்தைய படமான சுறா படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்ட ஈடு கோரி கோவை திரையரங்கு உரிமையாளர்கள் காவலன் படத்தை திரையிட மறுத்தனர்..
துப்பாக்கி
விஜய்யின் கெரியரில் முக்கியமான படங்களில் துப்பாக்கியும் ஒன்று 2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி பட தலைப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.. கள்ளத்துப்பாக்கி என்ற படக்குழுவினர் தங்கள் தலைப்பை விஜய் படத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறினார்.. இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் படத்திற்கு தடை கோரி போராட்டம் நடத்தின.. பலத்த எதிர்ப்புக்கு இடையே குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்ட சில வசனங்கள் மியூட் செய்யப்பட்ட பின்னர் தான் துப்பாக்கி படம் வெளியானது.
தலைவா
2013-ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தலைவா.. இந்த படத்தின் ‘ Time to Lead’ என்ற டேக்லைன் தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.. இந்த படம் அப்போது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. மர்மக் கடிதம் மூலம் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி படத்திற்கு தடை விதித்தது..
அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றும் விஜய்க்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை.. பின்னர் ஜெயலலிதாவுக்க்கு வேண்டுகோள் விடுத்து விஜய் வெளியிட்டார்.. நீண்ட போராட்டங்களுக்கு பின்னரே அந்த டேக் லைன் நீக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் சில நாட்கள் தாமதமாக படம் வெளியானது..
கத்தி
2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் கத்தி.. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததால் சர்ச்சையில் சிக்கியது.. ஏனெனில் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்ற செய்திகள் பரவியது.. தமிழ் தேசிய அமைப்புகள் இந்த படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்தன.. மேலும் கதை திருட்டு புகாரிலும் கத்தி படம் சிக்கியது.. கத்தி படத்தின் கதை தனது கதை என்று மீஞ்சூர் கோபி வழக்கு தொடர்ந்தார்.. பின்னர் சமரச பேச்சுவார்த்தைகளுக்கு பின் கோபி வழக்கை வாபஸ் பெற்றார்
மெர்சல்
2017-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் தனியார் மருத்துவமனைகள் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்த வசனங்களால் சர்ச்சையில் சிக்கியது.. பாஜகவினர் இந்த படத்தை கடுமையாக எதிர்த்தனர்.. சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.. எனினும் இந்த போராட்டங்களே மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது..
சர்கார்
2018-ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படமும் சர்ச்சையில் சிக்கியது.. மறைந்த முன்னாள முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லியை வில்லி கதாப்பத்திரத்திற்கு வைத்தது சர்ச்சையானது.. அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததும் அதிமுகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியது.. தமிழகம் முழுவதும் சர்க்கார் படத்தின் போஸ்டர்கள் கிழக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்தது. தமிழக அரசு அழுத்தத்தின் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் மறு தணிக்கையில் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியானது..
பீஸ்ட்
2002-ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட்.. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக இந்த படம் சர்ச்சையில் சிக்கியது.. இதனால் குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை..
ஜனநாயகன்
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. இந்த படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், பாதுகாப்பு அமைப்புகளை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரே புகார் கொடுத்ததால் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நாளை தீர்ப்பு வர உள்ளது.. இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



