இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் (Organised Crime Network Database – OCND)” என்ற தேசிய அளவிலான முதல் தரவுத்தளத்தை இந்தியா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தரவுத்தளத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘Anti-Terror Conference–2025’ என்ற இரு நாள் மாநாட்டில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஆண்டுதோறும் நடத்தும் முக்கிய நிகழ்வாகும்.
OCND என்றால் என்ன?
OCND என்பது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட பகுப்பாய்வு கருவி. இது, விசாரணை அதிகாரிகள் ஒரே கிளிக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான முழுமையான தகவல்களை உடனடியாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவுத்தளத்தில் நாடு முழுவதிலுமுள்ள காவல்துறைகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள், குற்றப்பத்திரிக்கைகள் குற்றவாளிகளின் விவரக் கோப்புகள் அமைப்புசார்ந்த குற்றச் செயல்கள் குறித்த பிற முக்கிய ஆவணங்கள் எல்லாம் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால், எந்த மாநிலத்திலும் உள்ள விசாரணை அமைப்புகள் இந்த தகவல்களை உண்மையான நேரத்தில் (Real Time) அணுக முடியும்.
NIA மற்றும் NATGRID இணைப்பு
இந்த OCND தரவுத்தளத்தை NIA, மாநில காவல்துறைகள் மற்றும் NATGRID (National Intelligence Grid) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. NATGRID என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாபெரும் தரவுப் பகிர்வு மேடை ஆகும். இது தீவிரவாத தடுப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு உதவுகிறது.
NIA அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற வலையமைப்புகள் மாநில எல்லைகளைத் தாண்டி செயல்படுகின்றன. பல நேரங்களில் இவை தீவிரவாத குழுக்களுடன் மறைமுக தொடர்பு வைத்திருக்கும். மாநிலங்களுக்கிடையே தகவல் பகிர்வு இல்லாததையே இவர்கள் பலமாக பயன்படுத்திக் கொண்டனர்.” என்று தெரிவித்தனர்..
ஏன் இந்த தரவுத்தளம் அவசியம்?
இதுவரை, ஒரு குற்றவாளி பல மாநிலங்களில் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தாலும், அவரைப் பற்றிய முழுமையான தகவல்கள் எந்த ஒரு மாநில காவல்துறைக்கும் தனித்தனியாக கிடைக்கவில்லை. இதனால் தகவல்கள் சிதறிக் கிடந்தன, குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து வந்தனர், ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது. இந்த குறைபாட்டை நீக்கவே OCND உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்கால பலன்
OCND மூலம், மாநில காவல்துறைகள் இடையே தகவல் பகிர்வு மிக வேகமாக நடைபெறும்.. குற்றவாளிகள் தொடர்பான முழு வலையமைப்பையும் அதிகாரிகள் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.. தீவிரவாதம் மற்றும் அமைப்புசார்ந்த குற்றங்களை முற்றாக ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடியும்
இதனால், இந்தியாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் தீவிரவாத வலையமைப்புகளுக்கு எதிரான போராட்டம் மேலும் பலமாகும் என NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த OCND (Organised Crime Network Database) பற்றிய மேலதிக முக்கிய விளக்கங்கள்:
இந்த புதிய தரவுத்தளம் AI அடிப்படையில் செயல்படும் புத்திசாலி அமைப்பு ஆகும். அதிகாரிகள் இதை “ChatGPT போல செயல்படும்” அமைப்பு என விளக்குகின்றனர். அதாவது, விசாரணை அதிகாரி ஒருவருக்கு ஒரு குற்றவாளி குறித்து தேவைப்படும் தகவலை கேட்கும் போதே, அந்த நபரின் முழு விபரங்களையும் உடனடியாகக் கணினி தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுத்தளத்தில் சாதாரண சுயவிவரங்கள் மட்டுமல்லாமல், குற்றவாளிகளின் குரல் பொருத்தம் (voice matching) வசதி விரல்முத்திரை (fingerprint) தகவல்கள், தொடர்புடைய வழக்குகள், வலையமைப்பு விவரங்கள் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் ஒரே நபர் வேறு பெயர்களில், வேறு மாநிலங்களில் செயல்பட்டாலும் அவரை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகும்.
அதிகாரிகள் கூறுவதுபடி, இந்த அதிநவீன தரவுத்தளம் விசாரணை அதிகாரிகளுக்கு வேகமாகவும் துல்லியமாகவும் நடவடிக்கை எடுக்க உதவும் முக்கிய ஆயுதமாக இருக்கும்.
OCND செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், தேசிய விசாரணை முகமை (NIA) ஒரு மைய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, நாடு முழுவதும் உள்ள போலீஸ் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு சரிபார்க்கப்பட்ட, பயன்படுத்தத் தகுந்த குற்றவாளி தொடர்பான தகவல்களை வழங்கும்.
இதனை அதிகாரிகள் இந்தியாவில் அமைதியை பாதிக்கும் ஒழுங்கமைந்த குற்றச்செயல்கள், பயங்கரவாத நிதி ஓட்டம் மற்றும் பொருளாதார குழப்பம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் பல மடங்கு வலிமை அளிக்கும் முக்கிய கருவி என்று தெரிவித்துள்ளனர்..



