சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து இந்திய நிதிச் சந்தையையே அதிரவைத்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.97,000ஐ தொட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் வழங்கும் நகைக்கடனின் அளவையும் உயர்த்த தீர்மானித்துள்ளன.
இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.7,000 ஆக உயர்த்தும் முடிவை கூட்டுறவு துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்காலத்தில் வெள்ளியையும் அடமானமாக வைத்து, அதன் மதிப்பிற்கு கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், அரசு தீவிரமாக ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒரு பக்கம் நிவாரணமாகக் கருதப்படுகிறதாலும், மறுபக்கம் வட்டி விகிதம் மற்றும் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்தால் கடன் திருப்பிச் செலுத்தும் சுமை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பல ஆண்டுகளாக நகைக்கடன் வழங்கும் முக்கிய தளமாக இருந்து வருகின்றன. ஆவணச் சிக்கல்கள் குறைவாக இருப்பதால், குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பெருமளவில் இதனை நாடுகிறார்கள். ஆனால் தங்கத்தின் விலை இவ்வளவு வேகமாக உயர்வது, தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு நன்மையாக இருந்தாலும், கடன் பெறுவோருக்கு நிதிசுமை அதிகரிக்கும் அறிகுறியாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



