இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மையமாக விளங்கும் ஒருங்கிணைந்த UPI சேவையின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் நவம்பர் 3ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளில் 10 செட்டில்மென்ட் சுழற்சிகளில் வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த/ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் கையாளப்பட்டன. மாதந்தோறும் பில்லியன் கணக்கில் அதிகரித்து வரும் UPI பரிவர்த்தனைகளை ஒரே சுழற்சியில் கையாள்வது, பணப் பரிமாற்றம் மற்றும் ரீஃபண்ட் நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், NPCI தற்போது பரிவர்த்தனைகளை இரண்டு வகையாகப் பிரித்து, அவற்றைத் தனித்தனி சுழற்சிகளில் கையாள முடிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் :
வழக்கமான வெற்றிகரமான பரிவர்த்தனைகள் (பணம் அனுப்புதல்) இனி, முன்பு போலவே காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உள்ள 10 தினசரி சுழற்சிகளில், வேறு எந்தச் சர்ச்சைகளும் இல்லாமல் பிரத்யேகமாகச் செயல்படுத்தப்படும். இதனால் பணப் பரிமாற்றம் முன்பைவிட வேகமாக நடக்கும்.
சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் :
பணம் அனுப்பும்போது தோல்வியடைவது, இருமுறை பணம் டெபிட் ஆவது போன்ற சிக்கலான பரிவர்த்தனைகளுக்கான தீர்வுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவை இனி இரண்டு பிரத்யேக சுழற்சிகளில் மட்டுமே கையாளப்படும். முதல் சுழற்சி நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரையிலும், இரண்டாம் சுழற்சி மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலும் செயல்படும்.
பயனர்களுக்குப் பயன்கள் என்ன..?
இந்தப் புதிய மாற்றம், தினசரி UPI பரிவர்த்தனைகளின் வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கான பணம் திரும்பக் கிடைப்பதில் இருந்த மிகப்பெரிய தாமதத்தையும் நீக்கும். ரீஃபண்ட் பணப் பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட நேர சுழற்சிகளில் கையாளப்படுவதால், உங்கள் பணம் எப்போது வங்கிக் கணக்கிற்குத் திரும்ப வரும் என்பதை எளிதாகக் கணிக்க முடியும்.



